மிகப்பெரிய ஷாட்களை அடிக்கிறோம் என்று கூறிக்கொண்டு விக்கெட்டை இழக்கக் கூடாது! வீரர்களுக்கு டோனி அறிவுரை

Report Print Kabilan in கிரிக்கெட்

பெரிய ஷாட்கள் அடிப்பது எளிதான விடயம் தான், திட்டமிடுதலுடன் விளையாடுவது அவசியம் என தனது அணி வீரர்களுக்கு டோனி அறிவுரை கூறியுள்ளார்.

பெங்களூருவில் நேற்று நடந்த ஐ.பி.எல் லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அந்த அணியில் வீரர்கள் அனைவரும் சொதப்பிய நிலையில் டோனி மட்டும் தனியாளாய் வெற்றிக்காக போராடினார். கடைசி வரை களத்தில் நின்ற அவர், ஆட்டமிழக்காமல் 84 ஓட்டங்கள் விளாசினார்.

சென்னை அணியில் துவக்க வீரர்களான வாட்சன், டூ பிளீசிஸ், ரெய்னா ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் அவுட் ஆனதால் அணிக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டது. இதுவரை ஆடியுள்ள போட்டிகளில் இந்த வீரர்கள் பெரிய அளவில் ஓட்டங்கள் குவிக்கவில்லை. ஆனால், டோனி 3 அரைசதங்களுடன் 314 ஓட்டங்கள் விளாசியுள்ளார்.

இந்நிலையில், தனது அணி வீரர்களுக்கு டோனி அறிவுரை வழங்கியுள்ளார். அவர் கூறுகையில், ‘நல்ல விறுவிறுப்பான போட்டியாக இருந்தது. நான் எதிர்பார்த்த ஓட்டங்களுக்கு உள்ளாகவே பெங்களூரு அணியை சுருட்டி நெருக்கடி கொடுத்தோம்.

பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால், பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை, பல திருத்தங்களை செய்ய வேண்டி இருக்கிறது. குறிப்பாக டாப்-ஆர்டரில் களமிறங்கும் துடுப்பாட்ட வீரர்கள் நல்ல பேட்டிங்கையும், நிலைத்து ஆடும் போக்கையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

எதிரணியின் தாக்குதல் வியூகத்தை தெரிந்துகொண்டால், எவ்வாறு திட்டமிடலாம் என்பது குறித்த விடயம் புலப்படும். ஆனால், தொடக்கத்திலேயே மிகப்பெரிய ஷாட்களை அடிக்கிறோம் என்று கூறிக்கொண்டு அடித்து விக்கெட்டுகளை இழந்தால், நடுவரிசையில் களமிறங்குபவர்களுக்கு தான் அழுத்தம், நெருக்கடி அதிகரிக்கும்.

மிகப்பெரிய ஷாட்கள் அடிப்பது எளிது, விக்கெட்டுகளை இழப்பதும் எளிது, அதோடு நமது வேலை முடிந்துவிட்டது என்று நினைக்கக் கூடாது. திட்டமிட்டு ஷாட்களை ஆடுவது அவசியம். அதேசமயம் களத்தில் நின்று தேவைக்கு ஏற்றார்போல் பெரிய ஷாட்களை ஆடாமல் இருப்பதும், அடுத்து களமிறங்குவோருக்கு அழுத்தத்தை கொடுக்கும்.

ஒரு துடுப்பாட்ட வீரர் களத்தில் இறங்கியவுடன் கணித்து செயல்பட வேண்டும். அதனால் தான் டாப்-ஆர்டர்கள் ஃபினிஷர்களாக இருக்க முடியும். 12 பந்துகளில் ஏறக்குறைய 36 முதல் 40 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அப்போது அதிகமான பவுண்டரிகளும், சிக்சர்களும் தேவைப்பட்டன. அதனால் தான் சில பந்துகளுக்கு நான் ஸ்ட்ரைக்கிங்கை நானே எடுத்துக்கொண்டு ஓட்டங்கள் ஓடவில்லை’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்