3வது ஆண்டாக நடையைக் கட்டும் கோஹ்லி அணி! பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறிய டெல்லி கேபிடல்ஸ்

Report Print Kabilan in கிரிக்கெட்

நேற்று நடந்த ஐ.பி.எல் லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி டெல்லி கேபிட்டல்ஸ் அணி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

ஐ.பி.எல் தொடரின் 46வது லீக் ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின.

முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ஓட்டங்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 52(37) ஓட்டங்களும், ஷிகர் தவான் 50(37) ஓட்டங்களும் குவித்தனர்.

கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய ரூதர்போர்டு 13 பந்துகளில் 3 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 28 ஓட்டங்கள் எடுத்தார். அதனைத் தொடர்ந்து பெங்களூரு அணி களமிறங்கியது. பார்த்தீவ் படேல்-கோஹ்லி அதிரடியாக இன்னிங்ஸை தொடங்கினர்.

சிக்சர்-பவுண்டரிகளாக விளாசிய பார்த்தீவ் படேல் 20 பந்துகளில் 39 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து கோஹ்லியும் (23) ஆட்டமிழக்க, நம்பிக்கை நட்சத்திரம் டிவில்லியர்ஸ் 17 ஓட்டங்களில் வெளியேறினார்.

Sandeep Saxena

அதன் பின்னர் டூபே 16 பந்துகளில் 24 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும், கிளாசன் 3 ஓட்டங்களிலும் மிஸ்ராவின் ஒரே ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் பெங்களூர் அணியின் தோல்வி உறுதியானது.

ஆட்டத்தின் 19வது ஓவரில் குர்கீரத் மான் சிங் 27 ஓட்டங்களில் இசாந்த் ஷர்மா பந்துவீச்சில் அவுட் ஆனார். கடைசி ஓவரில் பெங்களூர் வெற்றிக்கு 26 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஆனால், சிறப்பாக பந்துவீசிய ரபாடா 9 ஓட்டங்கள் மட்டுமே விட்டுகொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

BCCI

முடிவில் பெங்களூரு அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ஒட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது. ஸ்டோய்னிஸ் ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

ஆனால், 12 போட்டிகளில் 4யில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள பெங்களூரு அணி, எஞ்சிய இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றாலும் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாது. எனவே 3வது ஆண்டாக அந்த அணி பிளே-ஆப் சுற்றுக்கு செல்லாமல் வெளியேறுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்