ருத்ரதாண்டவம் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. வீணான ஹர்த்திக் பாண்ட்யா அரைசதம்!

Report Print Kabilan in கிரிக்கெட்

ஐ.பி.எல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.

ஈடன் கார்டனில் நேற்று நடந்த இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்றது. மும்பை அணித்தலைவர் ரோஹித் ஷர்மா பந்து வீச்சை தெரிவு செய்தார்.

அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணியில், தொடக்க வீரர்கள் சுப்மான் கில்-கிறிஸ் லின் இருவரும் மும்பை பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். இதன்மூலம் அணியின் ஸ்கோர் எகிறியது. இந்நிலையில் அரைசதம் அடித்த லின் 29 பந்துகளில் 54 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

அவரைத் தொடர்ந்து அதிரடி மன்னன் ஆந்த்ரே ரஸல் களமிறங்கினார். வழக்கம் போல் அவரும் சிக்சர்களை விளாச, மும்பை அணி 150 ஓட்டங்களை வேகமாக கடந்தது. தொடக்க வீரர் சுப்மான் கில் 45 பந்துகளில் 4 சிக்சர்கள், 6 பவுண்டரிகளுடன் 76 ஓட்டங்கள் எடுத்து பாண்ட்யா பந்துவீச்சில் அவுட் ஆனார்.

BCCI

அதன் பின்னர் ரஸல் ருத்ரதாண்டவம் ஆடினார். 40 பந்துகளில் அவர் 80 ஓட்டங்கள் விளாசி களத்தில் இருந்தார். இதில் 8 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும். இதன்மூலம் கொல்கத்தா அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 232 ஓட்டங்கள் குவித்தது.

இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. குவிண்டன் டி காக் ஓட்டங்கள் எடுக்காத நிலையில் நரைன் பந்துவீச்சில் வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து, அணித்தலைவர் ரோஹித் ஷர்மா(12) மற்றும் லீவிஸ்(15) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் 26 ஓட்டங்களிலும், பொல்லார்டு 20 ஓட்டங்களிலும் வெளியேறினர். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபுறம் ஹர்திக் பாண்ட்யா அதிரடியில் மிரட்டினார்.

AFP

அவரது அதிரடி ஆட்டத்தினால் ஜெட் வேகத்தில் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. பாண்ட்யா 34 பந்துகளில் 9 சிக்சர்கள், 6 பவுண்டரிகளுடன் 91 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 198 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்