உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்... கோப்பையை கைப்பற்ற காத்திருக்கும் கேப்டன்கள்!

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்தில் நடக்க உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ள அணிகளின் கேப்டன்கள் குறித்து இங்கு காண்போம்.

12வது உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வரும் 30ஆம் திகதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் 5 முறை கோப்பையை கைப்பற்றிய அவுஸ்திரேலியா, இரு முறை கைப்பற்றிய இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள், ஒருமுறை சாம்பியனான இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மீண்டும் ஒருமுறை கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்குகின்றன.

அத்துடன் முதல் முறையாக கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளும் உள்ளன. அவ்வப்போது அதிர்ச்சி கொடுக்கும் வங்கதேசம், விஸ்வரூப வளர்ச்சி எடுத்திருக்கும் ஆப்கானிஸ்தான் அணிகளும் களத்தில் குதிக்கின்றன.

இந்நிலையில், தங்கள் அணிகளுடன் களத்தில் இறங்கும் கேப்டன்கள் குறித்து காண்போம்.

இலங்கை - திமுத் கருணரத்னே

கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையில் கடைசியாக களமிறங்கிய திமுத் கருணரத்னே, தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரை தனது தலைமையில் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தார்.

இதுவரை 17 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவர் 190 ஓட்டங்கள் எடுத்துள்ளார். அவரது துடுப்பாட்ட சராசரி 15.83 ஆகும்.

இந்தியா - விராட் கோஹ்லி

கடந்த 2017ஆம் ஆண்டு ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியில், இந்திய அணியை வழிநடத்திய அனுபவம் உள்ள விராட் கோஹ்லி, முதல் முறையாக உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு தலைமை வகிக்க உள்ளார்.

கோஹ்லியின் தலைமையில் இந்திய அணி 68 போட்டிகளில் 49 வெற்றிகளைப் பெற்றுள்ளது. அவரது வெற்றி சதவிதம் 73.88 ஆகும்.

அவுஸ்திரேலியா - ஆரோன் பின்ச்

2018ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட ஆரோன் பின்ச், 18 போட்டிகளில் 10 வெற்றிகளை பெற்றுத் தந்தவர். அதிலும் குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான தொடர்களை இவரது தலைமையில் அவுஸ்திரேலியா வென்றது.

பாகிஸ்தான் - சர்ப்ராஸ் அகமது

ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியை 2017ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு வென்று கொடுத்தவர் என்ற சாதனையை வைத்திருக்கும் சர்ப்ராஸ் அகமது, இந்த முறை உலகக் கோப்பை தொடரிலும் அணியை வழிநடத்த உள்ளார்.

இவரது தலைமையில் பாகிஸ்தான் அணி 35 போட்டிகளில் 21 வெற்றிகளை பெற்றுள்ளது. உலகக்கோப்பை தொடரில் கேப்டன், நடுவரிசை வீரர், விக்கெட் கீப்பர் என 3 பணிகளை கையாள உள்ளார் சர்ப்ராஸ் அகமது.

தென் ஆப்பிரிக்கா - பாப் டூ பிளீசிஸ்

பாப் டூ பிளீசிஸ் 83.33 வெற்றி சதவிதத்தை வைத்திருக்கும் வெற்றிகரமான கேப்டன் ஆவார். இவரது தரப்பில் தென் ஆப்பிரிக்க அணி கடந்த ஆண்டில் இருந்து தற்போது வரை, ஐந்து இருதரப்பு கிரிக்கெட் தொடர்களை வென்றுள்ளது. அதேபோல் பேட்டிங்கில் 46.54 சராசரியையும் டூ பிளீசிஸ் கொண்டுள்ளார்.

நியூசிலாந்து - கேன் வில்லியம்சன்

பிரண்டன் மெக்கல்லம் தலைமையின் கீழ் விளையாடிய நியூசிலாந்து அணியில் சிறப்பாக விளையாடி வீரர் கேன் வில்லியம்சன். ஆனால், மெக்கல்லம் போல் அதிரடியாக விளையாடுபவர் அல்ல வில்லியம்சன். மாறாக நிதானமாகவும், கூர்மையாகவும் செயல்படுபவர்.

தற்போது சிறந்த துடுப்பாட்ட வீரராகவும், கேப்டனாகவும் செயல்பட்டு வரும் வில்லியம்சன், இம்முறை உலகக்கோப்பையில் தனது அணியை களமிறக்குகிறார். இவரது வெற்றி சதவிதம் 53.96 ஆகும்.

மேற்கிந்திய தீவுகள் - ஜேசன் ஹோல்டர்

இந்த உலகக் கோப்பையில் இளம் வயது கேப்டனாக உள்ளவர் ஜேசன் ஹோல்டர் (27) தான். இவரது தலைமையில், அனுபவம் வாய்ந்த மற்றும் இளம் வீரர்கள் என சரியான கலவையில் மேற்கிந்திய தீவுகள் அணி உலகக்கோப்பையை சந்திக்க உள்ளது.

வங்கதேசம் - மஷ்ரஃப் மோர்டசா

உலகக்கோப்பை தொடரில் 2வது முறையாக வங்கதேச அணியை மோர்டசா வழிநடத்த உள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில், இவரது தலைமையில் இங்கிலாந்து அணியை 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது.

எனினும், கால் இறுதியில் இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்திருந்தாலும், மோர்டசா தலைமையில் 73 ஆட்டங்களில் 40 வெற்றிகளை வங்கதேசம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் - குல்பாதின் நயிப்

உலகக்கோப்பை தொடரில் குல்பாதின் நயிப் கேப்டனாக அறிமுகமாகிறார். இதற்கு முன்னர் அணியை வழி நடத்திய அனுபவம் இல்லாத குல்பாதின், உலகக்கோப்பையில் எப்படி செயல்பட போகிறார் என்பதை காண அந்நாட்டு ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். மிதவேகப்பந்து வீச்சாளரான இவர், 52 போட்டிகளில் 40 விக்கெட்டுகள் மற்றும் 807 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...