உலகக்கோப்பையில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு காத்திருக்கும் சவால்! சாதிப்பாரா மலிங்கா?

Report Print Kabilan in கிரிக்கெட்
530Shares

இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக்கோப்பை ஒருநாள் தொடரில் அதிக ஓட்டங்கள் குவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பெரும் சவால் காத்திருக்கிறது.

இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரிலும் அதிக அளவில் ஓட்டங்கள் விளாசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அங்கு நிலவும் காலநிலை, உலர்ந்த ஆடுகளங்கள் உள்ளிட்ட காரணிகள் ஆகும்.

இந்நிலையில் இலங்கை அணியின் மலிங்கா, இந்திய அணியின் பும்ரா, அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், நியூசிலாந்தின் போல்ட், பாகிஸ்தானின் ஹசன் அலி எப்படி இந்த சவாலை எதிர்கொள்வார்கள் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

லசித் மலிங்கா (இலங்கை)

இலங்கை அணிக்கு மிகப்பெரிய பலமாக வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா உள்ளார். அனுபவ வீரரான அவர், 218 போட்டிகளில் 322 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இவரது சிறந்த பந்துவீச்சு 6/38 ஆகும். மேலும் ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளை 8 முறை வீழ்த்தியுள்ளார்.

சமீபத்தில் நடந்த ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் கடைசி பந்தை சிறப்பாக வீசி தனது அணியை வெற்றி பெற வைத்தார் மலிங்கா. எனவே அதேபோல் ஒரு மாயாஜாலத்தை உலகக்கோப்பையிலும் நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா)

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் துருப்பு சீட்டாக பும்ரா இருப்பார் என்று கூறப்படுகிறது. இறுதிகட்ட ஓவர்களில் பும்ரா சிறப்பாக பந்துவீசக் கூடியவர். சமீபத்தில் முடிவடைந்த ஐ.பி.எல் தொடரில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய பும்ரா, இதுவரை 49 ஒருநாள் போட்டியில் 85 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 5/27 ஆகும்.

மிட்செல் ஸ்டார்க் (அவுஸ்திரேலியா)

இடக்கை பந்துவீச்சாளரான மிட்செல் ஸ்டார்க், கடந்த முறை அவுஸ்திரேலியா தனது சொந்த மண்ணில் சாம்பியன் பட்டத்தை வென்றதில் முக்கிய பங்கு வகித்தார். அவர் 22 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். ஆனால், அதன் 4 ஆண்டுகளில் அதிக முறை காயங்களால் அவதிக்குள்ளானார்.

இதனால் தனது சீரான வேகத்தை இழந்த அவர், துடுப்பாட்ட வீரர்களை மிரட்டக்கூடிய வகையிலான திறனையும் இழந்தார். எனினும் இந்த உலகக்கோப்பையில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று அவுஸ்திரேலிய அணி நிர்வாகம் நம்பிக்கை வைத்துள்ளது.

இதுவரை 75 போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டார்க், 145 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 6/28 ஆகும்.

டிரெண்ட் போல்ட் (நியூசிலாந்து)

நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான டிரெண்ட் போல்ட், கடந்த உலகக்கோப்பையில் 22 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியவர். சமீபத்தில் பார்மில் இல்லாததால், ஐ.பி.எல் தொடரிலும் அவருக்கு போதுமான வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும் உலகக்கோப்பை தொடரில் மீண்டும் பார்முக்கு திரும்பி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை 79 போட்டிகளில் 147 விக்கெட்டுகளை போல்ட் வீழ்த்தியுள்ளார். அவரது சிறந்தபந்துவீச்சு 7/34 ஆகும்.

காகிசோ ரபாடா (தென் ஆப்பிரிக்கா)

ஐ.சி.சி தரவரிசையில் 5வது இடம் வகிக்கும் ரபாடா, தென் ஆப்பிரிக்க அணியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் எந்த விதமான ஆடுகளத்திலும், ஆட்டத்தின் எந்த தருணத்திலும் விக்கெட் வீழ்த்தும் திறன் கொண்டவர். சீரான வேகத்துடன் பந்தை ஸ்விங் செய்வது தான் இவரது பலம்.

சமீபத்தில் நடந்த ஐ.பி.எல் தொடரில் 25 விக்கெட்டுகளை வீழ்த்திய ரபாடா, 66 ஒருநாள் போட்டிகளில் 106 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 6/16 ஆகும்.

ஹசன் அலி (பாகிஸ்தான்)

ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் அணியில் விளையாடிய ஹசன் அலி, அந்த தொடரில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். 145 கிலோ மீற்றர் வேகத்தில் பந்துவீசும் திறன் கொண்ட ஹசன் அலி, இந்த உலகக்கோப்பை தொடரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹசன் அலி 47 போட்டிகளில் 78 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது சிறந்த பந்துவீச்சு 5/34 ஆகும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்