சச்சின் டெண்டுல்கரை அவரது ஆட்டத்தில் பார்த்தேன்! அவுஸ்திரேலியா வீரரை புகழ்ந்த பயிற்சியாளர்

Report Print Kabilan in கிரிக்கெட்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், ஸ்டீவ் ஸ்மித்தின் ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கரைப் பார்த்ததாக தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் 10 நாட்களில் தொடங்க உள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்ட வருகின்றன. அவுஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரையில், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் தடைக்குப் பின்னர் உலகக்கோப்பையில் களமிறங்குவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, வார்னர் ஐ.பி.எல் தொடரில் 500 ஓட்டங்களுக்கு மேல் குவித்து விஸ்வரூபம் எடுத்தார். இந்நிலையில், அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் உலகக்கோப்பை தொடர் குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், ‘அவுஸ்திரேலிய அணி உலகக்கோப்பை தொடருக்கு தயாராக இருக்கிறது. இங்கிலாந்து ஆடுகளங்களில் எங்களின் பந்துவீச்சு சற்று கவலை அளிப்பதாகத்தான் உள்ளது. துடுப்பாட்டம் செய்ய சாதகமான ஆடுகளங்களில் எதிரணியைக் கட்டுப்படுத்துவது அவசியம்.

நாங்கள் சிறப்பாக விளையாடுவோம். நாங்கள் இந்தியா மாதிரி ஆடுகிறோம். இங்கிலாந்து மாதிரி ஆடுகிறோம் என்பது போன்ற பல Comments வருகிறது. உண்மையில் நாங்கள் அவுஸ்திரேலியா போன்று தான் விளையாடுவோம்.

அதுதான் எங்களுக்குப் பெருமை. அவுஸ்திரேலியாவாக விளையாடித்தான் நாங்கள் உலகக்கோப்பைகளை வென்றிருக்கிறோம். நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டங்களில் அவரது ஆட்டம் சிறப்பாக இருந்தது.

ஒரு மாஸ்டர் மாதிரி அவர் ஆடினார். அவர் அணிக்குத் திரும்பியது மகிழ்ச்சியான விடயம். அவர் எப்போதும் துடுப்பாட்டம் செய்வதை விரும்புவார். கடந்த வாரம் பிரிஸ்பேனில் அவர் சிறப்பாக விளையாடினார்.

அவரது ஷாட்டுகள் நம்ப முடியாதபடியாக இருந்தது. எனக்கு சச்சின் டெண்டுல்கர் துடுப்பாட்டம் செய்வதை பார்ப்பதுபோல் இருந்தது. ஸ்மித் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில், ஸ்மித் ஆட்டமிழக்காமல் 89 மற்றும் 91 ஓட்டங்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்