உலகக்கோப்பையில் ஸ்பைடர்மேனாக மாற காத்திருக்கும் ஃபீல்டர்கள்!

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரில், ஃபீல்டிங்கில் அசத்தப்போகும் வீரர்கள் குறித்து காண்போம்.

வரும் 30ஆம் திகதி இங்கிலாந்தில் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இங்கிலாந்து ஆடுகளங்களைப் பொறுத்தவரை, கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பெரியளவில் ஓட்டங்கள் அடிக்கப்பட்டுள்ளன.

எனவே, இந்த முறை ஒவ்வொரு அணியும் தங்களது ஃபீல்டர்களிடம் இருந்து கணிசமான உதவியை பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. அதற்கான முனைப்பு அந்தந்த அணிகள் காட்டும். இந்த வகையில் தங்களது அபாரமான ஃபீல்டிங் திறமையினால் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய சில வீரர்கள் குறித்து பார்ப்போம்.

ஆந்த்ரே ரஸல் (வெஸ்ட் இண்டீஸ்)

ஐ.பி.எல் தொடரில் தனது அதிரடியால் மிரட்டிய ஆந்த்ரே ரஸல், அபாரமாக செயல்படக்கூடிய ஃபீல்டரும் கூட. பெரியளவிலான வெஸ்ட் இண்டீஸ் தொடர்களில், சில அசாதாரணமான முயற்சிகளை எடுக்கக்கூடியவர் இவர்.

கடந்த 2016ஆம் உலகக்கோப்பை டி20 தொடரில், கவர் திசையிலிருந்து பந்தை த்ரோ செய்து, தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் ஆம்லாவை ரன்-அவுட் செய்து அசத்தினார்.ரஸல் 52 ஒருநாள் போட்டிகளில் 998 ஓட்டங்களுடன், 11 கேட்சுகள் பிடித்துள்ளார்.

டேவிட் வார்னர் (அவுஸ்திரேலியா)

அபாரமான ஃபீல்டர்களை எப்போது கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணியில், தற்போது மிகச் சிறந்த ஃபீல்டராக டேவிட் வார்னர் இருக்கிறார். Point திசையில் துள்ளியவாறு, டைவ் அடித்து கேட்ச் செய்வதிலும் வல்லவரான டேவிட் வார்னர், எல்லைக் கோட்டுக்கு அருகேயும் ஃபீல்டிங்கில் அசத்தக்கூடியவர். வார்னர் 106 போட்டிகளில் 4,343 ஓட்டங்களுடன், 49 கேட்சுகள் பிடித்துள்ளார்.

ரவீந்திர ஜடேஜா (இந்தியா)

இந்திய அணியில் ஆல்-ரவுண்டராக இருக்கும் ஜடேஜா, ஃபீல்டிங்கிலும் திறம்பட செயல்படக்கூடியவர். அதிலும் குறிப்பாக ஸ்டெம்புகளை நோக்கி துல்லியமாக த்ரோ செய்பவர். அத்துடன் அசாதாரணமான வகையில் டைவ் அடித்து பந்தை கேட்ச் செய்பவர். ஜடேஜா 151 போட்டிகளில் 2,035 ஓட்டங்களுடன், 49 கேட்சுகள் பிடித்துள்ளார்.

பாப் டூ பிளீசிஸ் (தென் ஆப்பிரிக்கா)

உலக கிரிக்கெட் அரங்கில் தலை சிறந்த ஃபீல்டர் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வரும் நபர், முன்னாள் தென் ஆப்பிரிக்கா வீரரான ஜாண்டி ரோட்ஸ் தான். அவருக்கு அடுத்தபடியாக தென் ஆப்பிரிக்க அணியில் ஏபி டி வில்லியர்ஸ் இருந்தார். தற்போது டூ பிளீசிஸ் தென் ஆப்பிரிக்க அணியில் சிறந்த ஃபீல்டராக உள்ளார்.

ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடியபோது, எல்லைக் கோட்டுக்கு அருகே பல பந்துகளை அபாரமாக செயல்பட்டு தடுத்து நிறுத்தினார். அதேபோல் வியக்க வைக்கும்படியான கேட்சுகளையும் பிடித்துள்ளார். டூ பிளீசிஸ் 134 போட்டிகளில் 5,120 ஓட்டங்களுடன், 71 கேட்சுகள் பிடித்துள்ளார்.

பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)

ஆல்-ரவுண்டராக இங்கிலாந்து அணியில் கலக்கி வரும் பென் ஸ்டோக்ஸ், ஃபீல்டிங்கில் அபார திறனை வெளிப்படுத்தக்கூடியவர். பந்தை விரைவாக துரத்திச் செல்லுதல், துல்லியமாக த்ரோ செய்தல், எல்லைக்கோட்டுக்கு அருகே சாகசமான முறையில் கேட்ச் செய்தல் ஆகியவை தான் இவரின் பலம். இவர் 84 போட்டிகளில் 2,217 ஓட்டங்களுடன், 42 கேட்சுகள் பிடித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers