வெற்றியுடன் தொடங்கியது மகிழ்ச்சி: உற்சாகத்தில் இங்கிலாந்து கேப்டன்

Report Print Kabilan in கிரிக்கெட்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரை வெற்றியுடன் தொடங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் லீக் போட்டியில், இங்கிலாந்து அணி 104 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. அரைசதம் விளாசியதுடன், விக்கெட்டுகளை வீழ்த்தி, அபாரமான கேட்ச் பிடித்த இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்நிலையில், வெற்றி குறித்து பேசிய இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் கூறுகையில், ‘இந்த ஆட்டத்தில் நாங்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டோம். நாங்கள் பெரிய ஸ்கோர் குவிக்க விரும்பினோம்.

ஆடுகளத்தின் தன்மை எங்களது திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கவில்லை. இருப்பினும் அனுபவத்துடன் கூடிய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். இத்தகைய ஆட்டத்தை விளையாட கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.

பென் ஸ்டோக்ஸ் பேட்டிங், பந்துவீச்சு மட்டுமின்றி பீல்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டார். பெலக்வாயோ அடித்த பந்தை பென் ஸ்டோக்ஸ் அருமையாக கேட்ச் செய்தார். மேட்ச் வின்னரான அவர் மற்ற வீரர்களுக்கும் உத்வேகம் அளிக்கக்கூடியவர்.

எங்களது பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர். போட்டி தொடரை வெற்றியுடன் தொடங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்