வறுமைக்காக குவைத் சென்ற தமிழர்! கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து சாதனை

Report Print Raju Raju in கிரிக்கெட்

கிரிக்கெட் மைதானத்தில் பந்துகளை எடுத்து கொடுப்பதில் தொடங்கி தற்போது குவைத் தேசிய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து அசத்தியுள்ளார் தமிழகத்தை சேர்ந்த இளைஞர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பாச்சல் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் வரதப்பன். இவரின் கிராமத்தில் உள்ள சிறுவர்கள், பள்ளிக்குச் செல்வதைவிட விசைத்தறி ஆலைகளுக்கு தான் அதிகம் வேலைக்கு செல்வார்கள்.

ஆனால் தனது அண்ணன் பெரியசாமியின் ஆதரவால் பள்ளிப்படிப்பை தொடர்ந்திருக்கிறார் சங்கர்.

இந்நிலையில் பாச்சல் கிராமத்து இளைஞர்களுக்கான விளையாட்டு கிளப்பான பாச்சல் கிரிக்கெட் கிளப்பை சேர்ந்த வீரர்கள் விளையாடும்போது பந்துகளை எடுத்து கொடுப்பதில் தான் சங்கரின் கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியது.

பின்னர் அந்த கிளப் அணிக்காக விளையாட தொடங்கினார் சங்கர்.

இந்த சூழலில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடிந்ததும், துபாயில் ரேடியோகிராபி டெக்னிசியன் வேலையில் சேர்ந்தார். அவ்வப்போது விளையாட வாய்ப்புகள் கிடைத்தன.

2014ல் குவைத்தில் என்.பி.டி.சி கட்டுமான நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தபோது, அங்கு கேரளாவை சேர்ந்த கிரிக்கெட் குழுக்கள் பல இருந்தன. அங்கு விளையாடுவதற்கான வாய்ப்புகள் சங்கருக்கு அதிகம் கிடைத்தது.

அங்கு தனது திறமையை நிரூபித்து தற்போது குவைத் தேசிய கிரிக்கெட் அணியில் சங்கர் இடம்பிடித்துள்ளார்.

இதையடுத்து 2019ம் ஆண்டு ஜூலை மாதம் சிங்கப்பூரில் நடைபெறவுள்ள ஆசிய நாடுகளுக்கான டி20 தகுதிச்சுற்று கிரிக்கெட் போட்டியில் குவைத் நாட்டின் தேசிய அணியில் ஓபனிங் பேட்ஸ்மானாக விளையாடவுள்ளார் சங்கர்.

அவர் கூறுகையில், சிறுவயதில் இருந்து பல சிரமங்களுக்கு இடையில் தான் கிரிக்கெட் விளையாடினேன்.

குடும்ப வறுமை, கல்லூரி படிப்புக்கு வாங்கிய கடனை திரும்ப செலுத்துவது ஆகியவை என்னை வெளிநாட்டில் வேலை தேட வைத்தது.

ஆனால், அந்த சூழலிலும் கிரிக்கெட் விளையாட்டை நான் விடவில்லை

என்பிடிசி நிறுவனம் தனது பயண செலவுகள், விளையாடுவதற்கு தேவையான சாதனங்களை வாங்குவதற்கு உதவியது.

இதோடு எனது நிறுவனம் ஒரு கிரிக்கெட் அணியை உருவாக்கும் வாய்ப்பையும் எனக்கு கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...