கடைசி போட்டியில் வெற்றி... பெட்டி படுக்கையுடன் ஒன்றாக ஊருக்கு கிளம்பிய பாக்.- வங்கதேசம்

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

உலகக்கிண்ணம் தொடரில் வங்கதேசம் அணிக்கெதிராக நடைபெற்ற கடைசி போட்டியில் பாகிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

உலகக்கிண்ணம் தொடரின் 43-வது லீக் போட்டியானது வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில், லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பஹார் ஜமான் 13(31) ரன்னில் அவுட்டாகி வெளியேற, பாபர் அசாமுடன் சேர்ந்து இமாம் உல்-ஹக் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.

பாபர் அசாம் 96(98) ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த முகமது ஹபீஸ், இமாம் உல்-ஹக் உடன் சேர்ந்து ரன் வேட்டையில் ஈடுபட ஆரம்பித்தார். சிறப்பாக விளையாடி கொண்டிருந்த இமாம் உல்-ஹக் 100 பந்துகளில் 100 ரன்கள் குவித்த நிலையில் அவுட்டாகி வெளியேறினார்.

முகமது ஹபீஸ் 27(25) ரன்களிலும், ஹாரிஸ் சோகைல் 6(6) ரன்னிலும், வஹாப் ரியாஸ் 2(4) ரன்னிலும், ஷதப் கான் 1(2) ரன்னிலும், சற்று அதிரடி காட்டிய இமாத் வாசிம் 43(26) ரன்களிலும், முகமது அமிர் 8(6) ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்களை குவிந்திருந்தது. வங்கதேசம் அணி சார்பில் முஸ்டாபியூசுர் ரஹ்மான் 5 விக்கெட்டுகளும், சைபூதின் 3 விக்கெட்டுகளும், ஹசன் ஒரு விக்கெட்டும் கைப்பற்றியிருந்தார்.

இதனையடுத்து 316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் அணியில், துவக்க ஆட்டக்காரர்கள் சவுமியா சர்கார் 22(22) ரன்களும், தமிம் இக்பால் 8(21) ரன்களும் எடுத்து அவுட்டாகி வெளியேறினர்.

அடுத்து களமிறங்கிய முசிபூர் ரஹிம் 16(19) ரன்களும், லிட்டன் தாஸ் 32(40) ரன்களும் எடுத்து வெளியேறினர். இதற்கிடையில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி கொண்டிருந்த ஷகிப் அல் ஹசன் 64(77) ரன்களில் வெளியேறினார்.

அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேற வங்கதேச அணி 44.1 பந்துகளில் 221 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக ஷாகின் அப்ரிதி 6 விக்கெட்டுகளும், ஷதாப் கான் 2 விக்கெட்டுகளும், முகமது ஆமிர் மற்றும் வகாப் ரியாஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றியிருந்தனர்.

இதன்மூலம் பாகிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனாலும் அரையிறுதி போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்