உலகக்கோப்பையில் இருந்து பாதியில் வெளியேறிய தமிழக வீரர் விஜய்சங்கர்.. அடுத்து களமிறங்கப்போவது இதில் தான்!

Report Print Kabilan in கிரிக்கெட்

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் இந்த ஆண்டு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக விளையாட உள்ளதாக தமிழக வீரர் விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்.

எட்டு அணிகள் இடையிலான 4வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் 19ஆம் திகதி தொடங்குகிறது. இதனையொட்டி சென்னையில் நேற்றைய தினம், டி.என்.பி.எல் கிரிக்கெட் நிர்வாகிகள் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து, காயம் காரணமாக பாதியில் வெளியேறிய இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் வீரர் விஜய்சங்கர் இதில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் இந்த ஆண்டு நடக்கும் டி.என்.பி.எல் தொடரில் விளையாடுவேன் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ‘டி.என்.பி.எல் கிரிக்கெட் இளம் வீரர்களுக்கு நல்ல அடித்தளமாகும். இதன்மூலம் வாஷிங்டன் சுந்தர், டி.நடராஜன், வருண் சக்கரவர்த்தி போன்றவர்கள் ஐ.பி.எல் போட்டிக்கு தேர்வாகி விளையாடி இருக்கிறார்கள். அதேபோல் அவர்கள் தமிழக அணிக்காக ரஞ்சி போட்டியிலும் பங்கேற்று இருக்கிறார்கள்.

மேலும் பலர் டி.என்.பி.எல் போட்டியில் நன்றாக விளையாடி ஐ.பி.எல் போட்டிக்குள் நுழைய வேண்டும் என்று விரும்புகிறேன். டி.என்.பி.எல் தொடரில் இதுவரை நான் விளையாடவில்லை. இந்த ஆண்டு டி.என்.பி.எல் போட்டியில் நான் அறிமுகம் ஆவேன் என்று நம்புகிறேன்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்ல உள்ளேன். அங்கு சென்ற பிறகு தான் எனது உடல் தகுதி குறித்து தெரிய வரும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்