உலகக்கோப்பையில் அது எனது வாழ்வில் மறக்க முடியாத தருணம்! தமிழக வீரர் விஜய்சங்கர்

Report Print Kabilan in கிரிக்கெட்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முடிந்தவரை தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டதாகவும், முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தியது மறக்க முடியாத தருணம் என்றும் தமிழக வீரர் விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்.

ஆல்-ரவுண்டர் வீரரான விஜய் சங்கர் காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரில் இருந்து பாதியிலேயே விலகினார். தற்போது ஓய்வில் இருக்கும் அவர், டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ள சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்களை நேற்று பயிற்சியின்போது உற்சாகப்படுத்தினார்.

அப்போது அவர் அளித்த பேட்டியில், காயம் காரணமாக விளையாடாமல் இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது என்றும், டி.என்.பி.எல் கிரிக்கெட்டின் இறுதிகட்ட ஆட்டங்களில் ஆட முடியும் என்று உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ‘உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. அதை முடிந்தவரை நன்றாக பயன்படுத்தினேன்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் திடீரென பந்துவீச அழைக்கப்பட்டதும், முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தியதும் எதிர்பாராத ஒன்றாகும். இது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாகும். உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்ததால், மூத்த வீரர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது.

அதன் மூலம் எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தன. அந்த அனுபவங்களை, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்களுடன் பகிர்ந்து கொள்வேன். இது நிச்சயம் இளம் வீரர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

அஸ்வின் (திண்டுக்கல் அணி), தினேஷ் கார்த்திக் (காரைக்குடி அணி), முரளிவிஜய் (திருச்சி அணி) போன்ற சர்வதேச வீரர்கள் டி.என்.பி.எல் கிரிக்கெட்டில் விளையாடுவது மிகப்பெரிய விடயமாகும். இவர்கள் ஆடுவது இந்த தொடருக்கு மட்டுமல்ல. இளம் வீரர்களுக்கும் உத்வேகம் அளிப்பதாக அமையும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers