ஓய்வு முடிவை எடுக்கும் உரிமை டோனிக்கு மட்டுமே உள்ளது! தமிழக வீரர் பத்ரிநாத்

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணி வீரர் டோனியின் ஓய்வு குறித்து யாரும் பேசக்கூடாது என, தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த பத்ரிநாத் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடியவர். இந்திய அணிக்காக 7 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்டில் விளையாடியுள்ள பத்ரிநாத், ஐ.பி.எல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இந்நிலையில், கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பத்ரிநாத், உலகக்கோப்பையில் இந்திய அணி தோல்வியடைந்து வெளியேறியது மிகுந்த ஏமாற்றத்தை அளித்ததாக தெரிவித்தார். அத்துடன் டோனியின் ஓய்வு குறித்தும் அவர் பேசினார்.

அவர் கூறுகையில், ‘துடுப்பாட்டத்தில் நடுவரிசையில் சரியான தேர்வு இல்லாதது, இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம். டோனியின் ஓய்வு குறித்து யாரும் பேசக்கூடாது. முடிவை எடுக்கும் உரிமை அவருக்கு மட்டுமே உள்ளது.

இந்திய அணிக்காக நிறைய போட்டிகளை வெற்றி வசமாக்கியவர் டோனி. அவரின் ஓய்வு குறித்து தேர்வு குழுவின் தலைமை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதே சமயம் விக்கெட் கீப்பருக்கான அடுத்த வீரராக, ரிஷாப் பண்ட்டுக்கு அதிகமான வாய்ப்புகள் கொடுக்கப்படுவது இளம் வீரர்களை அணியில் வரவேற்கும் விதமாக உள்ளது.

இந்திய அணிக்கான கேப்டன் மாற்றம் தற்போதைக்கு தேவையில்லை. கோஹ்லி சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். இந்திய அளவில் வீரர்கள் தேர்வில் தமிழகம் எந்த பாரபட்சமும் இல்லாமலே நடந்து வருகிறது. திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்