மிரட்டிய மேத்யூஸ்.. வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்த இலங்கை!

Report Print Kabilan in கிரிக்கெட்

கொழும்பில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான 3வது மற்றும் கடைசி போட்டியில் அபார வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை இலங்கை அணி முழுமையாக கைப்பற்றியது.

இலங்கை-வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.

அவிஷ்கா பெர்னாண்டோ 6 ஓட்டங்களில் வெளியேற, கருணரத்னே - குசால் பெரேரா ஜோடி அபாரமாக விளையாடி 83 ஓட்டங்கள் சேர்த்தது. பின்னர், கருணரத்னே 46 ஓட்டங்களிலும், குசால் பெரேரா 42 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

அதனைத் தொடர்ந்து குசால் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ் இருவரும் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்களது கூட்டணி 4வது விக்கெட்டுக்கு 101 ஓட்டங்கள் குவித்தது. இந்நிலையில், அரைசதம் கடந்த குசால் மெண்டிஸ் 54 ஓட்டங்களில் சவுமியா பந்துவீச்சில் அவுட் ஆனார்.

AFP

தசுன் ஷனகா அதிரடியாக 14 பந்துகளில் 30 ஓட்டங்கள் விளாசினார். மறுபுறம் நங்கூரம் போல் நின்று விளையாடிய ஏஞ்சலோ மேத்யூஸ் 90 பந்துகளில் 87 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். இலங்கை அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 294 ஓட்டங்கள் குவித்தது.

வங்கதேச தரப்பில் ஷஃபிபுல் இஸ்லாம், சவுமியா சர்க்கார் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். அதன் பின்னர் வங்கதேசம் களமிறங்கியது. தொடக்க வீரர்கள் அனமுல் ஹகூ, தமிம் இக்பால் இருவரையும் ரஜிதா வெளியேற்றினார். அடுத்து வந்த ரஹீம், மிதுன், மக்மதுல்லா, சபீர் ரஹ்மான் மற்றும் மெஹிதி ஹசன் ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

மறுமுனையில் சவுமியா சர்க்கார் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். அணியின் ஸ்கோர் 143 ஆக இருந்தபோது, சவுமியா சர்க்கார் 86 பந்துகளில் 69 ஓட்டங்கள் எடுத்து தனஞ்செய பந்துவீச்சில் அவுட் ஆனார். இறுதியில் வங்கதேசம் அணி 36 ஓவர்களில் 172 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

தைஜுல் இஸ்லாம் மட்டும் 39 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். இலங்கை தரப்பில் ஷனகா 3 விக்கெட்டுகளும், லஹிரு குமார மற்றும் ரஜிதா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 3-0 என வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது இலங்கை அணி.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்