உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தோல்வி அடைந்ததற்கு சஞ்சய் பங்கர் தான் முக்கிய காரணம் என பிசிசிஐ கருதுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வி அடைந்து வெளியேறியது. இதைத் தொடர்ந்து இந்திய அணியின் தோல்வி குறித்து ஆய்வு நடத்தி வருகிறது பிசிசிஐ.
பேட்டிங் பயிற்சியாளராக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் பங்கர் கடந்த 2014 முதல் செயல்பட்டு வருகின்றார்.
அவர் பொறுப்பேற்ற பின்னர் இந்திய தொடக்க வீரர்களான ரோகித் சர்மா, ஷிகர் தவான், அஜிங்யா ரஹானே உள்ளிட்டோரின் பேட்டிங் திறன் கூடியுள்ளது.
கடந்த 5 வருடங்களாக பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பங்கர் இதுவரை 4வது இடத்தில் ஆடுவதற்கான சரியான வீரரை தெரிவு செய்யவில்லை. அதோடு பின் வரிசை வீரர்களை தயார் செய்யவும் தவறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் உலகக் கோப்பை அரையிறுதியில் டோனியை 7வது இடத்தில் களமிறக்கியது மிகப்பெரிய தவறாக பார்க்கின்றனர்.
இத்தனை காலம் இந்திய அணிக்கு 4வது இடத்திற்கு சரியான வீரரை தயார் செய்யாதது பிரச்னையாக இன்றும் உள்ளது. ரஹானே அல்லது ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் ராயுடு இந்த இடத்தை பூர்த்தி செய்ய தவறினர்.
எது எப்படியோ இந்தியா அணி உலகக்கோப்பையில் தோல்வியடைந்து வெளியேறியதற்கு சஞ்சய் பங்கரை பலிகடா ஆக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.