மீண்டும் களத்தில் இறங்கும் ஸ்ரீசாந்த்.. அறிவுரை கூறிய பிரபலம்

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்தின் தண்டனை காலம் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீசாந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக வலம் வந்தார். ஆனால், ஐ.பி.எல் தொடரில் அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் குற்றமற்றவர் என்று தன்னை அவர் நிரூபித்தாலும், பி.சி.சி.ஐ அவருக்கு வாழ்நாள் தடை விதித்தது. இந்நிலையில் ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் அவர் மீண்டும் களத்தில் இறங்க உள்ளார். ஆகஸ்டு மாதத்துடன் அவர் மீதான தடை முடிவடைகிறது. இதுகுறித்து ஸ்ரீசாந்த் கூறுகையில், ‘இப்போது எனக்கு 36 வயதாகிறது. அடுத்த ஆண்டு 37 வயதாகிவிடும். டெஸ்ட் போட்டியில் 87 விக்கெட்டுகள் எடுத்துள்ளேன்.

100 எடுக்க வேண்டும் என்பதே என் இலக்கு. டெஸ்ட் போட்டிக்கு மீண்டும் திரும்புவேன் என நம்பிக்கை உள்ளது. விராட் தலைமையில் விளையாட எப்போதும் எனக்கு ஆர்வம் உண்டு’ என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட தண்டனை காலம் குறைக்கப்பட்டது குறித்து, இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்தர் சேவாக் கூறுகையில்,

‘ஸ்ரீசாந்த் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியது மிக்க மகிழ்ச்சி. முதலில் அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டியது அவசியம்’ என தெரிவித்துள்ளார். அத்துடன் பாகிஸ்தான் வீரர் ஆமிர் கானின் தண்டனை காலம் முடிந்து, நேரடியாக சர்வதேச போட்டிகளில் விளையாடியது குறித்து கூறுகையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் எது வேண்டுமானாலும் நடக்கும் என்று கிண்டலடித்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்