71 ஆண்டுகளுக்கு பின் படுமோசமான ஆட்டம்.. இங்கிலாந்துக்கு கரும்புள்ளியாக அமைந்த ஆஷஸ் டெஸ்ட்!

Report Print Kabilan in கிரிக்கெட்

ஆஷஸ் டெஸ்டில் இங்கிலாந்து அணி 71 ஆண்டுகளுக்கு பிறகு மிக மோசமாக விளையாடி ஆல்-அவுட் ஆனது.

அவுஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் 3வது டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 179 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சர் 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதன் பின்னர் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. பர்ன்ஸ் 9 ஓட்டங்களில் வெளியேற, அணித்தலைவர் ஜோ ரூட் ஓட்டங்கள் எடுக்காமல் அவுட் ஆனார். இதனால் சரிவுக்குள்ளான இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர்களான கம்மின்ஸ், ஹேசல்வுட், பேட்டின்சன் ஆகியோரின் புயல்வேக தாக்குதலில் சிக்கிய இங்கிலாந்து, வெறும் 67 ஓட்டங்களுக்கு சுருண்டது.

AFP / Paul Ellis

Reuters

டென்லி(12) தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். அவுஸ்திரேலியா தரப்பில் ஹேசல்வுட் 5 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், பேட்டின்சன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

71 ஆண்டுகளுக்கு பின்னர் இங்கிலாந்து எடுத்து மிகவும் மோசமான score இதுவாகும். எனவே, அந்த அணியின் கிரிக்கெட் வரலாற்றில் இது கரும்புள்ளியாக அமைந்தது.

அதன் பின்னர் 112 ஓட்டங்கள் முன்னிலையுடன் அவுஸ்திரேலிய அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. வார்னர் இரண்டாவது பந்திலேயே ஆட்டமிழக்க, ஹாரிஸ் 19 ஓட்டங்களும், கவாஜா 23 ஓட்டங்களும் எடுத்தனர்.

பின்னர் வந்த ஹெட் 25 ஓட்டங்களிலும், மேத்யூ வேட் 33 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்கள் எடுத்தது.

லபுசாக்னே 53 ஓட்டங்களுடனும், பேட்டின்சன் 2 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். அவுஸ்திரேலியா இதுவரை 283 ஓட்டங்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்