39 பந்தில் சதம்.. பந்துவீச்சில் 8 விக்கெட்டுகள்! பிரம்மாண்ட சாதனை படைத்த வீரர்

Report Print Kabilan in கிரிக்கெட்

கர்நாடக பிரீமியர் லீக் டி20 தொடரில், பெல்லாரி டஸ்கர்ஸ் அணி வீரர் கிருஷ்ணப்பா கவுதம் 39 பந்துகளில் சதம் விளாசியதுடன், 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

பெங்களூருவில் கர்நாடக பிரீமியர் லீக் டி20 தொடரில் நேற்று நடந்த போட்டியில், பெல்லாரி டஸ்கர்ஸ்-ஷிவமோகா லயன்ஸ் அணிகள் மோதின. மழை காரணமாக ஆட்டம் 17 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது.

முதலில் ஆடிய பெல்லாரி அணி 17 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 203 ஓட்டங்கள் குவித்தது. முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய கிருஷ்ணப்பா கவுதம் எதிரணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தார்.

39 பந்துகளில் சதம் விளாசிய அவர், 56 பந்துகளில் 134 ஓட்டங்கள் விளாசி களத்தில் இருந்தார். இதில் 13 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும்.

பின்னர் ஷிவமோகா அணி களமிறங்கியது. துடுப்பாட்டத்தில் அதகளப்படுத்திய கிருஷ்ணப்பா கவுதம், பந்துவீச்சிலும் மிரட்டினார். அவரது அபார பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த ஷிவமோகா அணி, 16.3 ஓவரில் 133 ஓட்டங்களுக்கு சுருண்டது.

கிருஷ்ணப்பா கவுதம் 4 ஓவர்கள் வீசி, 15 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டி20 கிரிக்கெட்டில் இது பெரிய சாதனையாகும். இங்கிலாந்தின் காலின் ஆக்கர்மன் 7 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அதனை கவுதம் முறியடித்துள்ளார்.

போட்டி முடிந்ததும் பேசிய அவர் கூறுகையில், ‘இதை எதிர்பார்க்கவில்லை. எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி’ என தெரிவித்தார். சாதனை படைத்த கவுதமுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்