பயிற்சியில் ஈடுபட்டிருந்த கோஹ்லி அணி.. திடீரென வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜாம்பவான்!

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பயிற்சி பெறும் இடத்திற்கு, முன்னாள் ஜாம்பவான் வீரர் ராகுல் டிராவிட் திடீரென வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், மொஹாலியில் நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில், பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நாளை மறுதினம் நடக்கிறது. இதற்காக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அங்கு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவருமான ராகுல் டிராவிட், வீரர்கள் பயிற்சி செய்யும் இடத்திற்கு திடீரென வந்தார்.

அங்கு பயிற்சி செய்துகொண்டிருந்த மனீஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர், குர்ணால் பாண்ட்யா, ரிஷாப் பண்ட், நவ்தீப் சைனி, ராகுல் சாஹர் ஆகியோருடன் டிராவிட் உரையாடினார்.

இவர்கள் அனைவரும் இந்திய ஏ அணியின் பயிற்சியாளராக டிராவிட் இருந்தபோது அந்த அணியில் விளையாடியவர்கள். பின்னர் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியையும் சந்தித்து டிராவிட் ஆலோசனை நடத்தினார்.

இதுதொடர்பான புகைப்படத்தை பிசிசிஐ சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. அத்துடன் ‘இந்திய கிரிக்கெட்டின் இரண்டு பெருமைக்குரியவர்கள் சந்திக்கும்போது...’ என குறிப்பிட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்