இலங்கை தொடருக்கு தயாராக சொன்னார்கள்.. ஆனால் திடீரென.. வருத்தத்துடன் கூறிய யுவராஜ் சிங்

Report Print Kabilan in கிரிக்கெட்

‘யோ யோ’ தேர்வில் தகுதி பெற மாட்டேன் என இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் நினைத்தது என, இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், அதிரடி ஆட்டக்காரருமான யுவராஜ் சிங், உலகக்கிண்ண தொடருடன் ஓய்வு பெற விரும்புவதாக தெரிவித்திருந்தார். ஆனால், உலகக் கிண்ண அணியின் யுவராஜ் சிங் சேர்க்கப்படவில்லை. புற்றுநோயுடன் போராடி மீண்டு வந்த அவர், அணியின் மீண்டும் இடம் கிடைக்காததால் தனது ஓய்வை அறிவித்தார்.

இந்நிலையில் அவர் அளித்து பேட்டி ஒன்றில், ‘யோ யோ’ உடற்தகுதி தேர்வில் 36 வயதிலும் தேர்வு பெற்றது குறித்து யுவராஜ் சிங் மனம் திறந்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்குப் பின் நடந்த போட்டிகளில், இரண்டு ஆட்டங்களில் ஆட்டநாயகன் விருது பெற்றிருந்தேன். இருந்தும் அதற்குப் பின் என்னை அணியில் சேர்க்கவில்லை.

என்னை நீக்குவார்கள் என்று நினைக்கவே இல்லை. அப்போது நான் காயமடைந்து இருந்தேன். பின்னர் இலங்கை தொடருக்கு தயாராக சொன்னார்கள். தயாராக இருந்தபோது, திடீரென்று யோ யோ தகுதித் தேர்வுக்கு வரச் சொன்னார்கள்.

Ashley Allen/LatinContent/Getty Images

என்னால் அதில் தகுதி பெற முடியாது என்றே நினைத்தார்கள். 36 வயதிலும் யோ யோ உடல் தகுதித் தேர்வில் தேர்வு பெற்றேன். தேர்வு பெறாமல் விட்டிருந்தால், என்னை வெளியேற்ற அது ஒரு காரணமாகச் சொல்லப்பட்டிருக்கும். ஆனால், அதில் தேர்வு பெற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடச் சொன்னார்கள்.

பிறகு என்னிடம் அணி நிர்வாகம் பேசவில்லை. நாட்டுக்காக 15-17 வருடமாக விளையாடிக் கொண்டிருக்கும் ஒருவரிடம், அது எந்த வீரராக இருந்தாலும் சரி, அடுத்து என்ன செய்ய போகிறோம் என்பதை யாரும் உட்கார்ந்து பேசவில்லை.

எனக்கும் சரி, எனக்கு முன்னால் வீரேந்திர சேவாக், ஜாகிர் கான் ஆகியோரிடமும் ஓய்வு குறித்து யாரும் பேசவில்லை. நாங்கள் இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க இருக்கிறோம். அதனால் அணியில் சேர்க்க இயலவில்லை என்பதை உட்கார்ந்து பேசியிருந்திருக்கலாம். இந்திய கிரிக்கெட்டில் இது நடக்காத ஒன்று’ என தெரிவித்துள்ளார்.

GETTY IMAGES

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்