10 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் போட்டி.. பிரதமர் அளவிலான பாதுகாப்புடன் களமிறங்கும் இலங்கை அணி!

Report Print Kabilan in கிரிக்கெட்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் 10 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் முதல் ஒருநாள் போட்டியாக, இன்று நடக்கும் இலங்கை-பாகிஸ்தான் இடையேயான போட்டி அமைந்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் கடந்த 2009ஆம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, லாகூரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து, இலங்கை அணி உட்பட சர்வதேச கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்தன. பின்னர், 2018ஆம் ஆண்டு இலங்கை அணி ஒரு டி20 போட்டியிலும், மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு டி20 தொடரிலும் கராச்சியில் விளையாடின.

இந்நிலையில், பாகிஸ்தான் சென்று விளையாட முன்னணி வீரர்கள் பலர் மறுத்துவிட்ட நிலையில், திரிமன்னே தலைமையிலான இலங்கை அணி அங்கு சென்றுள்ளது.

இலங்கை அணி அங்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட இரண்டு தொடர்களில் விளையாடுகிறது. இதில் ஒருநாள் தொடர் முதலில் நடக்கிறது.

கராச்சியில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி, பகல்-இரவு ஆட்டமாக இன்று நடக்கிறது. முன்னதாக, இந்த தொடருக்கான கோப்பையை இரு அணித்தலைவர்களும் ஒன்றாக நின்று அறிமுகப்படுத்தினர்.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமருக்கு வழங்கப்பட்டு வரும் அளவிலான பாதுகாப்பு, இலங்கை வீரர்களுக்கு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

அத்துடன் வீரர்கள் தங்கியுள்ள ஹொட்டல்கள், சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்