இரண்டாவது இன்னிங்சிலும் சதம் விளாசிய ரோஹித் ஷர்மா! டெஸ்டில் வரலாற்று சாதனை

Report Print Kabilan in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சிலும் ரோஹித் ஷர்மா சதம் விளாசியுள்ளார்.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 502 ஓட்டங்களும், தென் ஆப்பிரிக்கா 431 ஓட்டங்களும் எடுத்தன.

அதனைத் தொடர்ந்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது. தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 7 ஓட்டங்களில் வெளியேறிய நிலையில், ரோஹித் ஷர்மா அபாரமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.

நங்கூரம் போல் நின்று விளையாடிய அவர், 133 பந்துகளில் 9 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் சதம் அடித்தார். ஏற்கனவே முதல் இன்னிங்சில் ரோஹித் ஷர்மா 176 ஓட்டங்கள் எடுத்திருந்தார். இதன்மூலம், தொடக்க வீரராக களமிறங்கிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே, இரண்டு இன்னிங்சிலும் அவர் சதம் விளாசி அசத்தியுள்ளார்.

தொடர்ந்து ஆடிய ரோஹித், 149 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்களுடன் 127 ஓட்டங்கள் ஆட்டமிழந்தார். இந்த சதத்தின் மூலம் சில சாதனைகளையும் அவர் படைத்துள்ளார். மூன்று வித கிரிக்கெட்டிலும் ஒரே போட்டியில் அதிக சிக்சர்கள் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை ரோஹித் படைத்துள்ளார்.

AP

இதற்கு முன்பு, இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து ஒரே டெஸ்டில் 8 சிக்சர்கள் விளாசியிருந்தார். ஆனால், ரோஹித் ஷர்மா முதல் இன்னிங்சில் 6 சிக்சர்களூம், இரண்டாவது இன்னிங்சில் 7 சிக்சர்களும் என மொத்தம் 13 சிக்சர்கள் விளாசியுள்ளார்.

2013ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 16 சிக்சர்களும், 2017ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் 10 சிக்சர்களும் ரோஹித் விளாசியிருந்தார். அதே போல் இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டின் சாதனை ஒன்றையும் முறியடித்துள்ளார்.

உள்ளூர் மைதானங்களில் 6 முறை 50 ஓட்டங்களுக்கு மேல் தொடர்ச்சியாக டிராவிட் விளாசியிருந்தார். அதனை தற்போது ரோஹித் முறியடித்துள்ளார். கடந்த 1982-83ஆம் ஆண்டு முன்னாள் அவுஸ்திரேலிய-தென் ஆப்பிரிக்க வீரர் கெப்ளர் வெஸ்ஸல், தொடக்க வீரராக களமிறங்கிய தனது முதல் டெஸ்டில் 208 ஓட்டங்கள்(இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து) எடுத்திருந்தார். அந்த சாதனையையும் ரோஹித் ஷர்மா (303 ஓட்டங்கள்) முறியடித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers