விளையாடுவதற்கு மைதானமும் இல்லை... ஊதியமும் கொடுக்கவில்லை... வேதனை தெரிவித்த பிரபல வீரர்கள்

Report Print Raju Raju in கிரிக்கெட்

பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைத்தும் தங்களுக்கு தகுந்த அங்கீகாரம் கிடைப்பதில்லை என வீரர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பார்வையற்றோருக்கான கிரிக்கெட் விளையாடும் அனைவரும் பார்வை குறைபாடு உடையவர்கள்.

100 சதவீதம் பார்வையற்றோர், 80 சதவீதம் பார்வை குறைபாடு உடையவர், 60 சதவீதம் அளவுக்கு பார்வை குறைபாடு உடையவர் என மூன்று வகை பார்வை குறைபாடுடன் இருப்பவர்களையும் சேர்த்து ஒரு அணி உருவாக்கப்படுகிறது.

மதுரையில் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்றுள்ள இவர்கள், பிறப்பிலிருந்தே பல்வேறு சவால்களை எதிர்கொண்ட நிலையில் தற்போது கிரிக்கெட்டிலும் உலகக் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர்.

ஆனால், தாங்கள் எவ்வளவுதான் சாதனை புரிந்தாலும் பார்வையற்றோருக்கான கிரிக்கெட் அணிகளுக்கு விளையாட மைதானம் கூட இல்லை என்பதே அவர்களது ஆதங்கம்.

இந்திய அணியில் விளையாடினாலும் முறையான ஊதியம் கிடைப்பதில்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.

பார்வை உள்ளோருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் ஆட்ட நாயகன் விருது பெறும் வீரர் ஒருவர் பரிசாக பெறும் தொகையைக் கொண்டு பார்வையற்றோருக்கான மாநில அளவிலான போட்டியை நடத்தி முடித்துவிடலாம் எனக் கூறப்படுகிறது.

ஆனால் இந்த நிதிகூட கிடைக்காததால் வருடத்திற்கு ஒரு முறைதான் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படுகிறது. சாதனையாளர்களுக்கு அரசு வேலை உள்ளிட்ட சலுகைகள் கிடைப்பதில்லை என வீரர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers