ஐபிஎல் போட்டியில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய மலிங்கா வீசிய நோ-பால் பந்து! அது தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு

Report Print Raju Raju in கிரிக்கெட்

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் நோ-பாலை கண்காணிக்க கூடுதல் நடுவரை நியமிப்பது என்று நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நோ- பால் சர்ச்சை அடிக்கடி எழுந்தது.

முக்கியமாக மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி ஆடிய போது கடைசி பந்தில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது.

மும்பை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா புல்டாசாக வீசிய கடைசி பந்தை எதிர்கொண்ட பெங்களூரு வீரர் ஷிவம் துபே ரன் எடுக்கவில்லை.

தொலைக்காட்சி ரீப்ளேயில் மலிங்கா, காலை கிரீசுக்கு வெளியே வைத்து நோ-பாலாக வீசியது தெரியவந்தது. ஆனால் நடுவர் இதை கவனிக்காமல் விட்டு விட்டார்.

இதனால் நடுவரிடம் பெங்களூரு அணித்தலைவர் கோஹ்லி கடும் வாக்குவாதம் செய்தார்.

நோ-பால் வழங்கியிருந்தால் எக்ஸ்டிரா வகையில் கூடுதலாக ஒரு ரன் கிடைத்திருக்கும். மேலும் அந்த பந்தில் ஓடி ஒரு ரன் எடுக்கவும் வாய்ப்பு இருந்தது. அதன் தொடர்ச்சியாக பிரீஹிட் வீசப்பட்டிருக்கும்.

அந்த பந்தை எதிர்முனையில் நின்ற டிவில்லியர்ஸ் தான் சந்தித்து இருப்பார். அதனால் ஆட்டத்தின் முடிவு வேறு மாதிரி அமைந்திருக்கலாம் என்று கோஹ்லி சாடினார்.

இதே போல சென்னை - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போதும் சர்ச்சை வெடித்தது.

அடுத்து வரும் ஐ.பி.எல். போட்டிகளில் இத்தகைய தவறுகளுக்கு இடம் கொடுக்காத வகையில் ஒவ்வொரு ஆட்டத்திற்கும் கூடுதலாக ஒரு தொலைக்காட்சி நடுவரை நியமிப்பது என்று மும்பையில் நேற்று நடந்த புதிய தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தலைமையில் நடந்த ஐ.பி.எல். நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டது.

இந்த பிரத்யேக நடுவரின் ஒரே வேலை, தொழில்நுட்ப உதவியுடன் ஒவ்வொரு பந்தையும் உன்னிப்பாக கண்காணித்து அது நோ-பாலாக இருந்தால் உடனடியாக அதை கள நடுவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வது தான்.

மற்றபடி 3-வது அல்லது 4-வது நடுவர் போல் செயல்படமாட்டார். உள்நாட்டில் வருகிற 8-ம் திகதி தொடங்கும் சையத் முஸ்தாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலோ அல்லது ரஞ்சி கிரிக்கெட் தொடரிலோ கூடுதல் நடுவர் திட்டம் சோதித்து பார்க்கப்படும் என்று தெரிகிறது.

அது வெற்றிகரமாக அமைந்தால் அடுத்தாண்டு நடக்கும் 13-வது ஐ.பி.எல்.-ல் கூடுதல் தொலைக்காட்சி நடுவர் புதுமையை பார்க்க முடியும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்