இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் பாப் வில்லீஸ் புற்றுநோய் பாதிப்பால் நேற்று தனது 70வது வயதில் மரணமடைந்தார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 325 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள பாப் 64 ஒரு நாள் போட்டிகளிலும் ஆடியிருக்கிறார்.
இங்கிலாந்து அணி சார்பில் அதிக விக்கெட்களை வீழ்த்திய நான்காவது வீரர் என்ற பெருமைக்கு அவர் சொந்தக்காரராக உள்ளார்.
கிரிக்கெட் போட்டிகளில் இருந்து 1984ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பாப் பின்னர் வர்ணனையாளராக பணியாற்றினார்.
இந்நிலையில் புற்றுநோய் பாதிப்பால் அவர் நேற்று மரணமடைந்தார். உயிரிழந்த பாப்புக்கு லவுரன் என்ற மனைவியும், கேட் என்ற மகளும் உள்ளனர்.
பாப் குறித்து அவர் குடும்பத்தார் விடுத்த அறிக்கையில், பாப்பின் இழப்பு மிகுந்த மன வேதனை அளிக்கிறது.
அவர் சிறந்த கணவராக, தந்தையாக, தாத்தாவாக திகழ்ந்தவர் என புகழாரம் சூட்டியுள்ளனர்.
பாப்பின் மறைவுக்கு சக கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இலங்கை அணி ஜாம்பவான் சங்ககாராவின் டுவிட்டர் பதிவில், அச்சமில்லாத வர்ணனையாளராகவும், தூய ஆத்மாவாகவும் பாப் இருந்தார், அவர் ஆன்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டுள்ளார்.
RIP Bob Willis. Tragic passing of one of the greats of English cricket, fearless broadcaster and gentle soul.
— Kumar Sangakkara (@KumarSanga2) December 5, 2019