இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து, 2-0 என்கிற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வந்தது. இதில் முதல் போட்டி மழையால் ரத்தானது.
அதனை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் புனே மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் தவான், கேஎல் ராகுல் ஆரம்பம் முதலே அதிரடி காட்ட ஆரம்பித்தனர்.

இந்த ஜோடி இணைந்து முதல் விக்கெட்டிற்கு 97 ரன்களை சேர்த்தது. ராகுல் 54 ரன்களும், தவான் 52 ரன்களும் எடுத்திருந்த போது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.
அதனை தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் மனிஷ் பாண்டே 31 ரன்களும், விராட் கோலி 18 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அதேசமயம் 7 வது விக்கெட்டிற்கு களமிறங்கிய சர்துல் தாக்கூர் 8 பந்துகளில் 28 ரன்களை எடுத்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.

ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை எடுத்திருந்தது.
202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில், முன்னணி வீரர்கள் அனைவரும் வந்த வேகத்திற்கு நடையை கட்டியதால் அந்த அணி பரிதாப நிலைக்கு சென்றது.

இலங்கை அணி சார்பில் ஏஞ்சலோ மேத்யூஸ் 31 ரன்களும், தனஞ்சய் டி சில்வா 57 ரன்களும் எடுத்து அணிக்கு ஆறுதல் அளித்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறியதால் 15. 5 ஓவர்களில் 123 ரன்கள் எடுத்து அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து தோல்வியை தழுவியது.
இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக நவ்தீப் சைனி 3 விக்கெட்டுகளையும், சர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.
இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என்கிற கணக்கில் கைப்பற்றியது.