ஒரே ஓவரில் 34 ரன்களை வாரி வழங்கிய இந்திய அணி பந்துவீச்சாளர்! செய்துள்ள மோசமான சாதனை

Report Print Raju Raju in கிரிக்கெட்

டி20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த 2-வது வீரர் என்ற மோசமான சாதனையை இந்தியாவின் ஷிவம் டுபே பதிவு செய்துள்ளார்.

நியூசிலாந்து - இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரை முழுவதுமாக 5 - 0 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது.

இந்த போட்டியில் ஒரு கட்டத்தில் நியூசிலாந்து வெற்றிக்கு 11 ஓவரில் 100 ரன்கள் தேவைப்பட்டது. 10-வது ஓவரை இந்திய இளம் வீரர் ஷிவம் டுபே வீசினார்.

இந்த ஓவரின் முதல் பந்தை செய்பெர்ட் சிக்சருக்கு தூக்கினார். 2-வது பந்தையும் சிக்சருக்கு தூக்கினார். 3-வது பந்தை பவுண்டரிக்கு துரத்தினார். 4-வது பந்தில் ஒரு ரன் விட்டுக்கொடுத்தார்.

முதல் நான்கு பந்தில் 17 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 5-வது பந்தை ராஸ் டெய்லர் பவுண்டரிக்கு துரத்தினார். அந்த பந்து நோ-பால் ஆக வீசினார் டுபே. இதனால் ஐந்து ரன்களுடன் ஒரு பந்தும் வீச வேண்டியிருந்தது. அந்த பந்தை டெய்லர் சிக்சருக்கு தூக்கினார். அதற்கு அடுத்த பந்தையும் சிக்சருக்கு தூக்கினார்.

ஆக மொத்தம் 6, 6, 4, 1, 4+1, 6, 6 என 34 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த இரண்டாவது பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன் ஸ்டூவர்ட் பிராட் இந்தியாவுக்கு எதிராக ஆறு பந்திலும் ஆறு சிக்சர்கள் விட்டுக்கொடுத்து முதல் இடத்தில் உள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்