இலங்கையின் அபார வெற்றியுடன் வரலாற்று சாதனை படைத்த அவிஷ்கா பெர்ணாண்டோ-குஷால் மெண்டிஸ் ஜோடி

Report Print Santhan in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவு அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் அவிஷ்கா பெர்ணாண்டோ மற்றும் குஷால் மெண்டிஸ் ஜோடி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவு அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கிடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இதையடுத்து நேற்று நடைபெற்று இரண்டாவது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 161 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-0 என்று முன்னிலை வகிப்பதுடன் தொடரையும் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இப்போட்டியில் இலங்கை அணியின் மூன்றாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த அவிஷ்கா பெர்ணாண்டோ மற்றும் குசால் மெண்டிஸ் ஜோடி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இலங்கை அணி 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட் இழப்பிற்கு தடுமாறிக் கொண்டிருந்தது.

அப்போது இந்த ஜோடி மேற்கிந்திய தீவு அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர் கொண்டு 239 ஓட்டங்கள் பார்ட்னர் ஷிப் கொடுத்தது.

இதன் மூலம் இதற்கு முன் கடந்த 2000-ஆம் ஆண்டு ஷார்ஜாவில் நடைபெற்ற இந்திய அணிக்கெதிரான தொடரில் இலங்கை அணியின் மார்வன் அட்டப்பட்டு மற்றும் மஹேல ஜெயவர்த்தனே ஜோடி 226 ஓட்டங்கள் குவித்த சாதனையை உடைத்துள்ளது.

அதுமட்டுமின்றி உலக அளவில் மூன்றாவது விக்கெட்டிற்கு அதிக ஓட்டங்கள் குவித்த நான்காவது ஜோடி என்ற சாதனையையும், இந்த ஜோடி படைத்துள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கெதிரான தொடரில் மேற்கிந்திய தீவு அணியின் டேவைன் பிராவோ மற்றும் தினேஷ் ராம்டின் ஜோடி 258 ஓட்டங்கள் குவித்து முதல் இடத்திலும், அடுத்தபடியாக அதே 2015-ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவு அணிக்கெதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணியின் ஹசிம் ஆம்லா மற்றும் ரில்லி ராஸ்வோ ஜோடி 247 ஓட்டங்கள் குவித்து இரண்டாவது இடத்திலும், 2016-ஆம் ஆண்டு இந்திய அணிக்கெதிரான போட்டியில் அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஜார்ஜ் பெய்லி ஜோடி 242 ஓட்டங்கள் குவித்து மூன்றாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்