கிரிக்கெட் போட்டியின் போது பந்தை எச்சில் கொண்டு பளபளப்பாக்க பந்துவீச்சாளர்களுக்கு தடை! காரணம் என்ன?

Report Print Raju Raju in கிரிக்கெட்

கிரிக்கெட் போட்டியின் போது பந்துவீச்சாளர்கள் பந்தை எச்சில் கொண்டு பளபளப்பாக்கும் வழக்கம் உள்ள நிலையில் கொரோனோ அச்சம் காரணமாக வீரர்கள் பந்தை எச்சில் மூலம் பளபளப்பாக்கும் செயலுக்கு ஐசிசி தடை விதித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அனில் கும்ப்ளே தலைமையிலான தொழில்நுட்ப குழு, மருத்துவ துறை தலைவருடன் வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலம் ஆலோசனை செய்து இந்த முடிவை எடுத்துள்ளனர்.

இதில், குறிப்பிட வேண்டிய விடயம் என்னவென்றால், வியர்வை மூலம் கொரோனோ வைரஸ் பரவுவது உறுதி செய்யப்படாததால் வீரர்கள் வியர்வை மூலம் பந்தை பளபளப்பாக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் போட்டி நடைபெறும் நாட்டில் உள்ள சர்வதேச நடுவர்களையே கள நடுவர்களாக நியமிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக இரண்டு அணிகளுக்கு போட்டி என்றால் அந்த நாட்டு நடுவர்களை தவிர மற்ற நாடுகளை சேர்ந்த நடுவர்களே போட்டியின் போது கள நடுவர்களாக நியமிக்கப்படுவர்.

தற்போது, ஊரடங்கு அமலில் இருப்பதால் விமான பயணம் சிக்கலாக அமைந்துள்ளது. இதனால் நடுவர்கள் பயணம் மேற்கொள்வதும் சிக்கலாக இருப்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்