2020 ஐபிஎல் தொடரில் மலிங்கா உட்பட இலங்கை வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல்

Report Print Basu in கிரிக்கெட்

இலங்கையில் நடைபெறவுள்ள லங்கன் பிரீமியர் லீக் (எல்பிஎல்) காரணமாக 2020 ஐபிஎல் தொடரின் முதல் வாரத்தில் இலங்கை வீரர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உலகளவில் பிரபலமான ஐபிஎல் தொடர் கொரோனா காரணமாக இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

2020 ஐபிஎல் தொடரின் முதல் வாரத்தை மும்பை இந்தியன்ஸ் வீரர் லசித் மலிங்கா மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பிடித்துள்ள இலங்கை வீரர் இசுரு உதனா ஆகியோர் தவறவிடுவார்கள் என கூறப்படுகிறது.

எல்.பி.எல் இன் அட்டவணை இன்னும் இலங்கை கிரிக்கெட் வாரியத்தால் இறுதி செய்யப்படவில்லை, ஆனால் எல்.பி.எல் இறுதிப் போட்டி நடைபெறும் வரை இலங்கை வீரர் யாரும் ஐ.பி.எல் அல்லது வேறு எந்த போட்டிகளுக்கும் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பல தகவல்கள் கூறுகின்றன. .

2020 ஐபிஎல் தொடங்கிய ஒரு நாளுக்குப் பிறகு அதாவது செப்டம்பர் 20-ம் திகதி எல்.பி.எல் தொடரின் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.

இதனால் லசித் மலிங்கா மற்றும் இசுரு உதனா ஆகியோர் செப்டம்பர் 20 ஆம் திகதிக்குப் பிறகு மட்டுமே ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் செல்ல முடியும், மேலும் அங்கு அவர்கள் 72 மணிநேரம் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியிருக்கும்.

அதனால் அவர்கள் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பது குறைந்தது ஒரு வாரமாவது தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்