ஐபிஎல் போட்டியில் அதிக மாற்றங்கள் இந்தாண்டு கொண்டுள்ள அணி! அந்த மாற்றங்கள் ஏற்றங்களை தருமா?

Report Print Raju Raju in கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஏற்பட்டுள்ள மாற்றம் அந்த அணிக்கு ஏற்றம் தருமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இதுவரை பட்டம் வெல்லாத அணிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் ஒன்று. அதிகபட்சமாக 2014-ம் ஆண்டில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தது. இதன் இறுதி ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சிடம் தோற்றது. அதன் பிறகு நடந்த ஐ.பி.எல். போட்டிகளில் பஞ்சாப் அணி லீக் சுற்றை கூட தாண்டியதில்லை.

ஐ.பி.எல். கோப்பையை முதல்முறையாக ருசிக்கும் துடிப்புடன் உள்ள அந்த அணி நிர்வாகம், வழக்கம் போல் இந்த முறையும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்துள்ளது. தலைமை பயிற்சியாளராக இந்திய முன்னாள் கேப்டன் அனில் கும்பிளே பொறுப்பேற்றுள்ளார். இந்த சீசனில் இந்தியரை தலைமை பயிற்சியாளராக கொண்ட ஒரே அணி பஞ்சாப் தான்.

இதே போல் கடந்த இரு சீசன்களில் கேப்டனாக இருந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பரஸ்பர மாற்றம் அடிப்படையில் டெல்லி அணிக்கு ஒதுக்கப்பட்டார். இதையடுத்து பஞ்சாப் அணியின் புதிய அதாவது 12-வது கேப்டனாக லோகேஷ் ராகுல் செயல்பட உள்ளார். முன்பு பஞ்சாப்புக்காக விளையாடி பிறகு வேறு அணிக்கு தாவிய ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கிளைன் மேக்ஸ்வெல்லை ரூ.10¾ கோடிக்கு ஏலத்தில் எடுத்து மீண்டும் பஞ்சாப் அணியில் சேர்த்துள்ளனர்.

லோகேஷ் ராகுலும், ‘சிக்சர் மன்னன்’ கிறிஸ் கெய்லும் அதிரடியான தொடக்க ஆட்டக்காரர்கள். சிறிது நேரம் களத்தில் நின்றாலும் பொளந்து கட்டி விடுவார்கள். மேக்ஸ்வெல், நிகோலஸ் பூரனும் எதிரணியின் பந்து வீச்சை சிதறடிப்பதில் வல்லவர்கள்.

ஆனால் மிடில் வரிசை தான் சற்று பலவீனமாக தென்படுகிறது. கருண் நாயர், தீபக் ஹூடா, மயங்க் அகர்வால், சர்ப்ராஸ் கான் உள்ளிட்டோர் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

பந்து வீச்சில் முகமது ஷமி, ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் 17 விக்கெட் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் மற்றும் முஜீப் ரகுமான், முருகன் அஸ்வின், காட்ரெல், நீஷம், ஜோர்டான் என்று திறமையான வீரர்களுக்கு பஞ்சமில்லை. இப்போதைக்கு பார்ப்பதற்கு, அணி மிகவும் வலுவாகவே தெரிகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்