மும்பையை பழிக்கு பழி தீர்த்த சென்னை! டோனிக்கு முதல் பந்திலே அவுட் கொடுத்த நடுவர்: ரோகித்துக்கு தொடரும் ராசி

Report Print Santhan in கிரிக்கெட்
6015Shares

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற முதல் ஐபிஎல் தொடரில் மும்பை அணியை, டோனி தலைமையிலான சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பரவல் காரணமாக 13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது

அதன் படி இன்று துவங்கிய முதல் போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும், ரோகித் தலைமையிலான மும்பை அணியும் மோதியது.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதலில் பீல்டிங்கை தெரிவு செய்தது.

அதன் படி முதலில் ஆடிய மும்பை அணிக்கு, துவக்க வீரர்களான மகேப்டன் ரோகித் சர்மா மற்றும் குயின்டன் டி காக் களமிறங்கினர்.

ரோகித் சர்மா 10 பந்துகளில் 12 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆனால், மறு முனையில் அதிரடியாக ஆடிய டிகாக் 20 பந்துகளில் 33 ஓட்டங்கள் எடுத்து சாம் கரன் பந்து வீச்சில் அவுட் ஆனார்.

பின்னர் வந்த சூர்ய குமார் யாதவ் 17 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சற்று நிலைத்து நின்று ஆடிய சவ்ரப் திவாரி 42 ஓட்டங்கள், அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 14 ஓட்டங்களிலும், பொல்லார்டு 18 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 162 ஓட்டங்கள் எடுத்தது.

சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக லிங்கிடி 3 விக்கெட்டுகளையும், தீபக் சாஹார் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து 163 ஓட்டங்கள் எடுத்தால், வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

துவக்க வீரரான விஜய் 1 ஓட்டத்திலும், வாட்சன் 4 ஓட்டங்களிலும் என அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.

பவர் பிளே முடிந்து சென்னை அணி 8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 51 ஓட்டங்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய அம்பதி ராயுடுவும், டூ பிளசிசும் பொறுப்புடன் ஆடினர்.

குறிப்பாக, அம்பதி ராயுடு அதிரடியாக ஆடி அரை சதமடித்தார். அவருக்கு டு பிளசிஸ் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இதன் காரணமாக சென்னை அணியின் ரன் வேகம் அதிகரித்தது.

இறுதியில், சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 166 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராயுடு 48 பந்தில் 71 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். டூ பிளசிசும் அரை சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் மும்பையிடம் தோற்றதற்கு சென்னை அணி பழி தீர்த்துக் கொண்டது.

ஆனால், அதே சமயம் மும்பை அணியை பொறுத்தவரை முதல் போட்டியில் தோற்ற தொடர்களில் அடுத்தடுத்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை கைப்பற்றியுள்ள ராசியும் உள்ளது.

மேலும், இப்போட்டியில் ஏழாவது பேட்ஸ்மேனாக 438 நாட்களுக்கு பிறகு கிரிக்கெட் விளையாட வந்த டோனி சந்தித்த முதல் பந்திலேயே அம்பயர் அவுட் கொடுத்தது சென்னை மற்றும் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.

ஏனெனில், பும்ரா வீசிய அந்த பந்து டோனிக்கு இடது பக்கமாக சென்று கீப்பர் டி காக்கை அடைந்தது. அதற்கு மும்பை வீரர்கள் அப்பீல் செய்ய நடுவர் ஒரு நொடி கூட யோசிக்காமல் அவுட் கொடுத்தார்.

உடனடியாக எதிர்முனையில் நின்று கொண்டிருந்த டுபிளசிஸிடம் பேசிய டோனியை அம்பயரின் முடிவை எதிர்த்து ரீவ்வியூ சென்றார்.

அதில் டோனியின் பேட்டில் பந்து படவே இல்லை என தெரிந்ததும் டிவி நடுவர், களத்தில் நின்று கொண்டிருந்த நடுவரின் முடிவை பின்வாங்கிக் கொள்ளும்படி தெரிவிக்க நாட் அவுட் பேட்ஸ்மேனாக டோனி களத்தில் நின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்