சூப்பர் ஓவரில் சொதப்பிய பொல்லார்டு: கோஹ்லியின் பெங்களூரு அணி த்ரில் வெற்றி

Report Print Arbin Arbin in கிரிக்கெட்
355Shares

ஐபிஎல் தொடரின் 10-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி திரில் வெற்றி பெற்றது.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தனது இரண்டாவது லீக் போட்டியில் 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில்,

இன்றையை போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 3 விக்கெட்களை இழந்து 201 ஓட்டங்களை குவித்து போட்டியை சூப்பர் ஓவருக்கு நகர்த்தியது.

நாணய சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி துபாயில் மைதானத்தில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி, தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. தேவ்தத் படிக்கல், ஆரோன் ஃபிஞ்ச் ஆகிய இருவரும் பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தனர். இறுதியில் 9 ஆவது ஓவரில் இந்த இணை ட்ரன்ட் போல்டால் பிரிக்கப்பட்டது.

ஆரோன் ஃபிஞ்ச் 52 ஓட்டங்களும், தேவ்தத் படிக்கல் 54 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

தொடக்க வீரர்கள் சரியான அடித்தளம் இட்டுத் தந்த நிலையில், அணித்தலைவர் கோஹ்லி 3 ஓட்டங்களுக்கு தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

இறுதியில் டி விலியர்ஸ், ஷிவம் துபே இருவரும் சேர்ந்து அணியின் ஸ்கோரை உச்சத்திற்குக் கொண்டு சென்றனர்.

டி விலியர்ஸ் 24 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகள் விளாசி 55 ஓட்டங்களும், ஷிவம் துபே 10 பந்துகளில் 27 ஓட்டங்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் இருந்தனர்.

இதனால், பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 201 ஓட்டங்களை குவித்தது.

202 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் தொடகத்தில் சொதப்பியது.

ரோஹித் ஷர்மா வெறும் 8 ஓட்டங்களுக்கு நடையைக் கட்ட, அதைத் தொடர்ந்து டி காக் 14 ஓட்டங்களுக்கு பெவிலியன் திரும்பினார்.

அடுத்தாகக் களமிறங்கிய சூர்யக்குமார் டக் அவுட் ஆனதால், மும்பை அணி 39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் என்ற சிக்கலான நிலையிலிருந்தது. அதிரடி புயல் ஹார்திக் பாண்டியாவும் 15 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க இஷான் கிஷன், கெய்ரன் பொல்லார்டு இருவரும் இணைந்து அணியைச் சரிவில் இருந்து மீட்கத் தொடங்கினர்.

மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற 30 பந்துகளுக்கு 90 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் பொல்லார்ட் அதிரடியாக விளையாடி சிக்ஸர், பவுண்டரிகளை பறக்கவிட்டு 12 பந்துகளுக்கு 31 ஓட்டங்கள் தேவை என்ற நிலையை உருவாக்கினார்.

இஷான் கிஷன் 58 பந்துகளில் 9 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 99 ஓட்டங்கள் சேர்த்தார். கெய்ரன் பொல்லார்டு 24 பந்துகளில் 5 சிக்ஸர், 3 பவுண்டரிகள் விளாசி 60 ஓட்டங்கள் சேர்த்து இறுதிவரை களத்தில் இருந்தார்.

இதனால், மும்பை இந்தயன்ஸ் 5 விக்கெட்கள் இழந்து 201 ஓட்டங்கள் எடுத்ததால் போட்டி சமன் ஆனது.

சூப்பர் ஓவரில், நவ்தீப் சைனி அபார பந்து வீச்சை வெளிப்படுத்தியதால், பொல்லார்டு 4 பந்துகளில் 5 ஓட்டங்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.

இறுதியில் பெங்களூரு அணிக்கு 8 ஓட்டங்களை மும்பை அணி இலக்காக நிர்ணயித்தது.

பும்ரா வீசிய ஓவரில், விராட் கோஹ்லி, டி விலியர்ஸ் கூட்டணி கடைசிப் பந்தில் வெற்றி இலக்கை எட்டியது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்