தினேஷ் கார்த்திக்கிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டுள்ளது! தமிழனுக்கு ஆதரவாக ஆகாஷ் சோப்ரா விளாசல்

Report Print Santhan in கிரிக்கெட்

கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக தினேஷ் கார்த்திக் அறிவித்திருக்கும் நிலையில், இதற்கு அணி நிர்வாகம் தான் காரணமாக இருக்க முடியும் என்று வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

இந்தாண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், கொல்கத்தா அணிக்கு கேப்டனாக, தமிழகத்தை சேர்ந்தவரும், இந்திய அணி வீரருமான தினேஷ் கார்த்திக் இருந்தார்.

ஆனால், நேற்று நடைபெற்ற மும்பை அணிக்கெதிரான போட்டிக்கு முன்பு, திடீரென்று தான் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாகவும், பேட்டிங்கில் கவனம் செலுத்தப்போவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து கேப்டன் பதவி அந்தணியில் இருக்கும் இயான் மோர்கனுக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் பலரும் தினேஷ் கார்த்திக்கிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டுள்ளது என்றே கூறி வருகின்றனர்.

இது குறித்து வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா எனக்குத் தெரிந்தவரை, நான் கேள்விப்பட்டவரை தினேஷ் கார்த்திக் தாமாக முன்வந்து கேப்டன் பதவியிலிருந்து விலகவில்லை.

அணி நிர்வாகம் தினேஷ் கார்த்திக்கிடம் இருந்து கேப்டன் பதவியைப் பறித்துள்ளது. ஆனால், அணி நிர்வாகம் வெளியிட்ட செய்தியில் தினேஷ் கார்த்திக் கேப்டன் பதவியில் தொடர விரும்பவில்லை, பேட்டிங் மீது கவனம் செலுத்தப்போகிறார் என்று தெரிவித்தது.

ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். எந்த ஒரு நேர்மையான வீரரும், கேப்டனும் ஒரு போட்டித் தொடரில் நடுவழியில் தனது அணியை விட்டுச் செல்லமாட்டார். அதனால்தான் சொல்கிறேன். தினேஷ் கார்த்திக்கிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டுள்ளது. நான் இதுவரை கார்த்திக்கிடம் பேசவில்லை.

நடந்துவரும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி தினேஷ் கார்த்திக் தலைமையில் சிறப்பாகத்தானே செயல்பட்டது. 7 போட்டிகளில் 4 ஆட்டங்களில் வென்றிருந்தார்கள். மீதமுள்ள போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்றாலே சூப்பர் லீக் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடலாமே என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர், தினேஷ் கார்த்திக் பேட்டிங்க் அந்தளவிற்கு மோசமாக இல்லை, கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்தார்.

அவ்வாறு இருக்கும் போது பேட்டிங்கில் கவனம் செலுத்தப்போகிறேன் எனக் கூறி அவர் ஏன் கேப்டன் பதிவியிலிருந்து விலக வேண்டும். எனக்குத் தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்