சதம் விளாசிய ஷிகர் தவன்: சென்னை அணி அதிர்ச்சி தோல்வி

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

ஷிகர் தவானின் அதிரடியான சதத்தால் டெல்லி கேபிடல்ஸ் அணி சென்னை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய 34வது ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துடுப்பாட்டம் தெரிவு செய்தது. சென்னை அணியின் சார்பில் சாம் கர்ரண் மற்றும் பாப் டூ பிளஸ்சிஸ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.

அந்த ஜோடியில் சாம் கர்ரண் (0) ரன் ஏதும் எடுக்காமல் கேட்ச் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்ததாக களமிறங்கிய ஷேன் வாட்சன், டூ பிளஸ்சியுடன் ஜோடி சேர்ந்தார்.

சீரான ஆட்டத்தினை வெளிப்படுத்தி ஓட்டங்கள் சேர்த்து வந்த இந்த ஜோடியில் ஷேன் வாட்சன் 36(28) ஓட்டங்களில் போல்ட் ஆனார்.

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டூ பிளஸ்சிஸ் 39 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார். தொடர்ந்து ஆடிய டூ பிளஸ்சிஸ் 58(47) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அணித்தலைவர் டோனி 3(5) ஏமாற்றமளித்தார்.

அடுத்ததாக ராயுடுவுடன், ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்தார். அதிரடியில் கலக்கிய இந்த ஜோடி, டெல்லி அணியினரின் பந்து வீச்சை நாலா புறமும் சிதறடித்தனர்.

இறுதியில் ஜடேஜா 33(13) ஓட்டங்களும், அம்பத்தி ராயுடு 45(25) ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்கள் எடுத்தது.

இதையடுத்து, 180 ஓட்டங்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி டெல்லி கேபிடல்ஸ் அணி களமிறங்கியது.

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா ரன் எதுவும் இன்றி டக் அவுட் ஆனார்.

மற்றொரு துவக்க வீரர் ஷிகர் தவான் நங்கூரம் போல நிலைத்து நின்றாலும், மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன.

ரகானே ( 8 ), அணித்தலைவர் ஷ்ரேயாஸ் அய்யர் (23 ) என ஆட்டமிழந்தனர். இருப்பினும், ஷிகர் தவான் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு சரியான பந்துகளை தெரிவு செய்து பவுண்டரிக்கும் விரட்டினர்.

கடைசி 4 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 41 ஓட்டங்கள் தேவைப்பட்டன. சாம் கரண் வீசிய 17-வது ஓவரில் தவான் 1 பவுண்டரியும், சிக்ஸரும் அடிக்க 11 ஓட்டங்கள் கிடைத்தன.

18-வது ஓவரை ஷர்துல் தாக்குர் வீசினார். முதல் 5 பந்துகளில் 5 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

ஆனால், கடைசி பந்தை தவான் பவுண்டரிக்கு விரட்டினார். இதனால், கடைசி 2 ஓவரில் டெல்லி வெற்றிக்கு 21 ஓட்டங்கள் தேவைப்பட்டன.

19-வது ஓவரை மீண்டும் சாம் கரண் வீசினார். முதல் பந்திலேயே அலெக்ஸ் கேரி 4 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

இந்த ஓவரை சிறப்பாக வீசிய கரண் 1 வைட் உள்பட 4 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

அதேசமயம், கடைசி பந்தில் 1 ரன் எடுத்த தவான் 57-வது பந்தில் சதத்தையும் எட்டினார். இதையடுத்து, கடைசி ஓவரில் டெல்லி வெற்றிக்கு 17 ஓட்டங்கள் தேவைப்பட்டன.

கடைசி ஓவரை பிராவோ வீசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பந்தை ஜடேஜாவிடம் கொடுத்தார் டோனி.

முதல் பந்து வைடாக போக, அடுத்த பந்தில் தவான் 1 ரன் எடுத்தார். அடுத்த 2 பந்துகளில் அக்சர் சிக்ஸர்களைப் பறக்கவிட கடைசி 3 பந்துகளில் 3 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்டன.

அடுத்த பந்தில் 2 ஓட்டங்கள் எடுக்க, கடைசி 2 பந்துகளில் 1 ரன் மட்டுமே தேவைப்பட்டது. அதையும் அக்சர் சிக்ஸருக்குப் பறக்கவிட டெல்லி அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தவான் 58 பந்துகளில் 101 ஓட்டங்களும், அக்சர் படேல் 5 பந்துகளில் 21 ஓட்டங்களும் சேர்த்தனர்.

9 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணிக்கு இது 7-வது வெற்றியாகும். இதன் மூலம் 14 புள்ளிகளுடன் ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது 6-வது தோல்வியாகும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்