பட்டையை கிளப்பிய பட்லர்... சென்னையை வீழ்த்தி ராஜஸ்தான் அசத்தல் வெற்றி

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

13-வது ஐபிஎல் சீசனின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக ஜடேஜா 30 பந்துகளில் 35 ஓட்டங்கள் சேர்த்தார். டோனி(28), சாம் கரன்(22), ராயுடு(13) ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்பினர்.

இதனையடுத்து 126 ஓட்டங்கள் என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் ராபின் உத்தப்பா களமிறங்கினர்.

ஸ்டோக்ஸ் துரிதமாக ரன் சேர்க்க 2 ஓவர்களில் 20 ஓட்டங்கள் எடுத்தது ராஜஸ்தான். இதையடுத்து, சஹார் வீசிய 3-வது ஓவரில் ஸ்டோக்ஸ் 19 ஓட்டங்களுக்கு போல்டானார்.

அடுத்த ஓவரில் உத்தப்பா 4 ஓட்டங்களுக்கு ஹேசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். சஹார் வீசிய 5-வது ஓவரில் சாம்சன் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஆட்டமிழந்தார்.

இதனால், ராஜஸ்தான் 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இதன்பிறகு, ஜோஸ் பட்லர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இணை ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்பினர். ஸ்மித் மிகவும் நிதானமாக விளையாட, மறுமுனையில் பட்லர் பவுண்டரிகளாக அடித்து விளையாடி வந்தார்.

பந்துவீச்சாளர்களை மாற்றியும் சென்னைக்குப் பலனளிக்கவில்லை. ஷர்துல் தாக்குர் வீசிய 12-வது ஓவரில் பட்லர் அதிரடிக்கு மாறினார். அந்த ஓவரில் 1 சிக்ஸர், 1 பவுண்டரி அடிக்க 13 ஓட்டங்கள் கிடைத்தன.

பியூஷ் சாவ்லா வீசிய 15-வது ஓவரில் பட்லர் ஹாட்ரிக் பவுண்டரி அடிக்க அந்த ஓவரில் மட்டும் 16 ஓட்டங்கள் கிடைத்தன.

அதேசமயம் பட்லரும் அரைசதத்தைக் கடந்தார். இதனால், கடைசி 5 ஓவர்களில் 18 ஓட்டங்கள் மட்டுமே தேவை என்ற நிலை உருவானது.

சாவ்லா வீசிய 17-வது ஓவரில் 1 சிக்ஸர், 1 பவுண்டரி அடிக்கப்பட ராஜஸ்தானுக்கு 12 ஓட்டங்கள் கிடைத்தன.

3 ஓவர்களில் 2 ஓட்டங்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், ராஜஸ்தான் 18-வது ஓவரில் வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்டீவ் ஸ்மித் 34 பந்துகளில் 26 ஓட்டங்களும், ஜோஸ் பட்லர் 48 பந்துகளில் 70 ரன்களும் எடுத்தனர்.

சென்னை தரப்பில் தீபக் சஹார் 2 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹேசில்வுட் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்