விஜய், மணீஷ் பாண்டே மிரட்டல்: ராஜஸ்தானை சிதறடித்த ஐதராபாத்

Report Print Arbin Arbin in கிரிக்கெட்
176Shares

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் மணீஷ் பாண்டே, விஜய் சங்கர் மிரட்டல் ஆட்டத்தால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

13-வது ஐபிஎல் சீசனின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற ஐதராபாத் அணித் தலைவர் டேவிட் வார்னர் களத்தடுப்பை தெரிவு செய்தார்.

இதனையடுத்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ஓட்டங்கள் எடுத்தது.

155 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் ஐதராபாத் தொடக்க ஆட்டக்காரர்களாக அணித்தலைவர் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்கினர்.

ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரிலேயே வார்னர் 4 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். ஆர்ச்சர் வீசிய 3-வது ஓவரில் பேர்ஸ்டோவ் 10 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து திணறிய நிலையில், மணீஷ் பாண்டேவுடன் விஜய் சங்கர் இணைந்தார்.

மணீஷ் அதிரடி காட்டி மிரட்ட, விஜய் சங்கர் மறுமுனையில் நிதானம் காட்டி விக்கெட்டைப் பாதுகாத்து ஒத்துழைப்பு தந்தார்.

இதனால், வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டும் 8-க்கு கீழ் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த இணை களத்தில் நீடித்துக் கொண்டே இருந்ததால், ராஜஸ்தானுக்கு அச்சுறுத்தலாக இருந்தது.

மணீஷ் பாண்டே 28 பந்துகளில் அரைசதம் அடித்தும், அதிரடி காட்டி வந்தார். சுழற்பந்துவீச்சாளர்களுக்கு விக்கெட்டுகள் விழாததால், மீண்டும் ஆர்ச்சரே பந்துவீச அழைக்கப்பட்டார்.

அவர் ஓவரிலும் விக்கெட் விழவில்லை. இதனால், வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் 7-க்கும் கீழ் குறைந்தது.

இதையடுத்து, விக்கெட் வேண்டும் என்பதால் 16-வது ஓவரிலேயே ஆர்ச்சரின் கடைசி ஓவரை வீச அழைத்தார் ராஜஸ்தான் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித்.

இதற்கும் பலனில்லாமல், விஜய் சங்கர் முதல் 3 பந்துகளில் பவுண்டரிகள் அடித்து மிரட்டினார். கார்த்திக் தியாகி மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஓவரில் மணீஷ் தலா 1 சிக்ஸர் அடிக்க ஐதராபாத் வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 3 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்டன.

இதையடுத்து, தியாகி வீசிய 19-வது ஓவரின் முதல் பந்தில் விஜய் சங்கர் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

அதேசமயம் அவரது அரைசதத்தையும் எட்டினார். இந்த இணை 3-வது விக்கெட்டுக்கு 140 ஓட்டங்கள் சேர்த்தது.

18.1 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ஓட்டங்கள் எடுத்த ஐதராபாத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மணீஷ் 47 பந்துகளில் 83 ஓட்டங்களும், விஜய் சங்கர் 51 பந்துகளில் 52 ஓட்டங்களும் எடுத்தனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்