முதல் ஓவரில் விக்கெட்...அடுத்து 30-ஓட்டங்களுக்குள் 6-விக்கெட்! சென்னை அணியை கதற விடும் மும்பை

Report Print Santhan in கிரிக்கெட்

மும்பை அணிக்கெதிரான போட்டியில், சென்னை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகள் விளையாடி வருகின்றன. இதில் நாணய சுழற்சியில் வென்ற மும்பை அணி, முதலில் துடுப்பெடுத்தாடியது.

அதன் படி சென்னை அணிக்கு துவக்க வீரர்களாக இளம் வீரர் ருத்துராஜ் கெய்க்வாட், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் துவக்க வீரர்களாக களம் இறங்கினர்.

முதல் ஓவரை டிரென்ட் போல்ட் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் ருத்துராஜ் கெய்க்வாட் ஓட்டம் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த அம்பதி ராயுடு பும்ரா வீசிய அடுத்த ஓவரின் 4-வது பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 2 ஓட்டங்கள் மட்டுமே அடித்தார்.

அடுத்து வந்த ஜெகதீசன் முதல் பந்திலேயே நடையை கட்ட, சென்னை அணி 3 ஓட்டங்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தது.

4-வது விக்கெட்டுக்கு டு பிளிஸ்சிஸ் உடன் டோனி ஜோடி சேர்ந்தார். 3-வது ஓவரை போல்ட் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் டு பிளிஸ்சிஸ் 1 ரன் எடுத்த நிலையில் வெளியேறினார். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் 3 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது.

அதன் பின், 5-வது விக்கெட்டுக்கு டோனியுடன் ஜோடி சேர்ந்த ஜடேஜா, 6-வது ஓவரில் அவுட்டானார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஜடேஜா 7 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

6-வது விக்கெட்டுக்கு டோனியுடன் சாம் கர்ரன் ஜோடி சேர்ந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் 6 ஓவர்களில் 24 ஓட்டங்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.

7-வது ஓவரை ராகுல் சாஹர் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை சிக்சருக்கு தூக்கிய டோனி, அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். டோனி 16 ஓட்டங்களில் ஆட்டமிழக்க சென்னை 6.4 ஓவரில் 30 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்