பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்து கொண்ட கொல்கத்தா! டெல்லி அணியை வீழ்த்தி அபார வெற்றி

Report Print Santhan in கிரிக்கெட்

டெல்லி அணிக்கெதிரான போட்டியில் 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைத்து கொண்டது.

ஐபிஎல் தொடரின் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறவுள்ளது. அதன் படி நடைபெற்ற முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் மோதின.

இதில் நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி, முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுக்மன் கில் மற்றும் நிதிஷ் ராணா களமிறங்கினர். கில் 9 ஓட்டங்களில் நட்ராஜ் பந்து வீச்சில் வெளியேறினார்.

அடுத்துவந்த ராகுல் திரிபாதியும் 13 ஓட்டங்களிலும், தினேஷ் கார்த்திக் 3 ஓட்டங்களிலும் வெளியேற கொல்கத்தா அணி 7.2 ஓவரில் 42 ஓட்டங்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அடுத்துவந்த சுனில் நரைன், ராணாவுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 32 பந்துகளை சந்தித்த நரைன் 6 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் உள்பட 64 ஓட்டங்கள் குவித்த நிலையில், ரபாடா பந்து வீச்சில் வெளியேறினார்.

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ் ராணா 53 பந்துகளில் 13 பவுண்டரிகள் 1 சிக்சர் உள்பட 81 ஓட்டங்கள் குவித்து ஸ்டாய்னஸ் பந்து வீச்சில் வெளியேறினார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 194 ஓட்டங்களை குவித்தது.

இதையடுத்து 195 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் துவக்க வீரர்களாக ரஹானே மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர்.

ஆனால், ரஹானே முதல் பந்திலேயே ஓட்டம் எதுவும் எடுக்காமல் எல்பிடபுள்யூ முறையில் வெளியேறினார்.அடுத்து டெல்லி அணியின் கேப்டர் ஷ்ரேயாஸ் அய்யர் களமிறங்கினார்.

மறுமுனையில் நின்றுகொண்டிருந்த தொடக்க வீரரான தவான் 6 பந்துகளில் 6 ஓட்டங்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்து வீச்சில் வெளியேறினார்.

அடுத்துவந்த ரிஷப் பண்ட் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யருடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 33 பந்துகளை சந்தித்த பண்ட் 27 ஓட்டங்களிலும், பின்னர் களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரரான ஷிம்ரான் ஹேட்மயர் 5 பந்தில் 10 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

சற்று நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ஷ்ரேயாஸ் 38 பந்துகளில் 47 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சக்ரவர்த்தி பந்து வீச்சில் அவுட் ஆனார்.

பின்னர் வந்த டெல்லி வீரர்கள் அனைவரும் கொல்கத்தா அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனால், 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்ததால், கொல்கத்தா அணி 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி, 11 போட்டிகளில் 6 வெற்றி 5 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியதுடன், பிளே ஆப்பிற்கான வாய்ப்பை இன்னும் தக்க வைத்து கொண்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்