என்னையா எடுக்கல! கோஹ்லி முன்னாடி அடித்து காட்டிய சூர்யகுமார் யாதவ்: பெங்களூருவை வீழ்த்தி மும்பை அபார வெற்றி

Report Print Santhan in கிரிக்கெட்
603Shares

பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில், மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று முதல் ஆளாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரின் இன்றைய 48-வது லீக் ஆட்டம் அபுதாபியில் நடைபெற்றது. இதில் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணியும், பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

அதன் படி நாணய சுழற்சியில் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தெரிவு செய்தது. அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் துடுப்பெடுத்தாடியது.

ஜோஷ் பிலிப், தேவ்தத் படிக்கல் ஆகியோர் பெங்களூரு அணிக்கு துவக்க வீரர்களாக களம் இறங்கினர்.

இருவரும் சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்தனர். ஜோஷ் பிலிப் 24 பந்தில் 33 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது பெங்களூரு அணி 7.5 ஓவரில் 71 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

அடுத்து வந்த விராட் கோஹ்லி 9 ஓட்டங்களிலும், டி வில்லியர்ஸ் 15 ஓட்டங்களிலும், ஷிவம் டுபே 2 ஓட்டங்களிலும் வெளியேறினர்.

மறுபுறம் சிறப்பாக ஆடி வந்த துவக்க வீரர் தேவ்தத் படிக்கல் 45 பந்தில் 74 ஓட்டங்கள் அடிக்க பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ஓட்டங்கள் எடுத்தது.

அதன் பின் 165 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு துவக்க வீரர்களாக குயிண்டன் டிகாக் மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர்.

இந்த ஜோடி ஆரம்பத்தில் இருந்தே அடித்து ஆடினர். ஆனால் குயிண்டன் டி காக் 19 பந்தில் 18 ஓட்டங்களிலும், இஷான் கிஷான் 19 பந்தில் 25 ஓட்டங்களிலும் வெளியேற, தனி ஒருவனாக சூர்யகுமார் யாதவ் பெங்களூரு அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தார்.

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான மூன்று வித போட்டிகளுக்கான வீரர்கள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் சூர்யகுமார் யாதவ் பெயர் இடம் பெறவில்லை, கடந்த மூன்று சீசனிலும் சிறப்பாக விளையாடி வரும் சூர்யாகுமார் யாதவ் இந்திய அணியில் இடம் பெறாமல் இருந்தது ரசிகர்கள் பலருக்கும் கவலையை அளித்தது.

ஆனால், அதற்கு எல்லாம் பதில் அளிக்கும் விதமாக, அதிலும் குறிப்பாக இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி முன்னாடி சிறப்பாக விளையாடினார். இதனால் மும்பை அணி இறுதியாக 19.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

சூர்யகுமார் யாதவ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 43 பந்துகளில் 79 ஓட்டங்கள் குவித்தார். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி, 16 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், பெங்களூரு அணி 14 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்