பஞ்சாப்பின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான்!அபார வெற்றி: பிளே ஆப்பிற்கு போராடும் அணிகள்

Report Print Santhan in கிரிக்கெட்
358Shares

பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில், ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின, இப்போட்டியை பொறுத்தவரை ராஜஸ்தான் அணிக்கு வாழ்வா? சாவா? என்பது போன்று தான் இருந்தது.

இதனால் இப்போட்டியில் கட்டாய வெற்றியை நோக்கி ராஜஸ்தான் களமிறங்கியது. அதே சமயம் பஞ்சாப் அணிக்கும் இப்போட்டி, முக்கியமான போட்டியாக இருந்தது.

அதன் படி நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.

பஞ்சாப் அணிக்கு துவக்க வீரர்களாக மந்தீப் சிங், கேஎல் ராகுல் ஆகியோர் களம் இறங்கினர். முதல் ஓவரின் கடைசி பந்தை சந்தித்த மந்தீப் சிங் ஓட்டம் ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.

அடுத்து கே.எல் ராகுல் உடன் கிறிஸ் கெய்ல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கிறிஸ் கெய்ல் 33 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி 14.4 ஓவரில் 121 ஓட்டங்கள் எடுத்த நிலையில் கேஎல் ராகுல் 46 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் 10 பந்தில் 22 ஓட்டங்கள் எடுத்து வெளியேற, கிறிஸ் கெய்ல் ஒரு புறம் அதிரடி ஆட்த்த்தை வெளிப்படுத்தி வந்தார்.

கடைசி ஓவரின் 3-வது பந்தை சிக்சருக்கு தூக்கி கெயில் 99 ஓட்டங்களை எட்டினார். அடுத்த பந்தில் ஒரு ஓட்டம் எடுத்து சதம் அடித்துவிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், ஆர்ச்சர் பந்து வீச்சில் போல்டாகி வெளியேறினார்.

இதனால் பஞ்சாப் அணி இறுதியாக 20 ஓவர் முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 185 ஓட்டங்கள் எடுத்தது.

186 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு, உத்தப்பா மற்றும் பென் ஸ்டோக்ஸ் சிறப்பான துவக்கம் கொடுத்தனர்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 60 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டோக்ஸ் 50 ஓட்டங்களில் வெளியேறினார்.

அடுத்து உத்தப்பாவுடன் ஜோடி சேர்ந்த சாம்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவருமே பஞ்சாப் அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கியதால், அணியின் ரன் விகிதம் சீரான வேகத்தில் எகிறியது.

அணியின் எண்ணிக்கை 111 ஓட்டங்களாக இருந்த போது உத்தப்பா 30 ஓட்டங்களிலும், சாம்சன் 48 ஓட்டங்களிலும் வெளியேற, அடுத்து ஆடிய ஸ்மித் மற்றும் பட்லர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, ராஜஸ்தான் அணி 17.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 186 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி 13 போட்டிகளில் 6 வெற்றி, பஞ்சாப் அணி 13 போட்டிகளில் 6 வெற்றி, கொல்கத்தா 13 போட்டிகளில் 6 வெற்றி, ஹைதராபாத் 12 போட்டிகளில் 5 வெற்றி என இருப்பதால், பிளே ஆப் சுற்றில் 3-வது மற்றும் 4-வது இடத்திற்கு தகுதி பெறப் போகும் அணி யார் என்பதில் போட்டி நிலவி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்