இந்திய அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு முதலில் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கிடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. இதையடுத்து இன்று இரு அணிகளுக்கிடையே இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.
அதன் படி நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அவுஸ்திரேலியா அணிக்கு துவக்க வீரர்களான வார்னர் மற்றும் பின்ச் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 142 ஓட்டங்கள் குவித்திருந்த போது, பின்ச் சமி பந்தில் 60 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
அடுத்து வந்த ஸ்மித் தன் பங்கிற்கு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, அவுஸ்திரேலியா அணியின் ரன் விகிதம் ஜெட் வேகத்தில் எகிறியது.
அவுஸ்திரேலியா அணி சார்பில் ஸ்மித் சதமடித்து 104 ஓட்டங்களும், வார்னர் 83 ஓட்டங்களும், Marnus Labuschagne 70 ஓட்டங்களும், ஸ்மித் 60 ஓட்டங்களும் எடுத்தனர்.
இந்திய அணி தரப்பில் பும்ரா, மொகமது ஷமி மற்றும் ஹார்திக் பாண்ட்யா தல ஒரு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து 390 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. மயங்க் அகர்வால், ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
அகர்வால் 26 பந்தில் 28 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தவான் 30 ஓட்டங்களிலும் வெளியேற, கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்த ஷ்ரேயாஸ் அய்யர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஆனால், அடித்து விளையாட நினைக்கும்போது 38 ஓட்டங்களில் அய்யர் வெளியேற, கோஹ்லி 89 ஓட்டங்களில் பெளவிலியன் திரும்ப, கே.எல்.ராகுல் 76 ஓட்டங்களிலும் அவுட்டாகியதால், இந்திய அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹார்திக் பாண்ட்யா 28 ஓட்டங்கள், இறுதி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஜடேஜா 24 என அவுட்டாகியதால், இந்திய அணி இறுதியாக 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 338 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் அவுஸ்திரேலியா அணி 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-0 எனக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.