31 பவுண்டரி..5 சிக்ஸர் என இரட்டை சதம்! ஒரே போட்டியில் பல சாதனைகளை முறியடித்து பட்டையை கிளப்பிய இளம் இந்திய வீரர்

Report Print Basu in கிரிக்கெட்
0Shares

விஜய் ஹசாரே டிராபி தொடரில் பாண்டிச்சேரி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணித்தலைவர் பிரித்வி ஷா இரட்டை சதம் அடித்து பட்டையை கிளப்பியுள்ளார்.

சமீபத்தில் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிக மோசமாக விளையாடிதால் பிரித்வி ஷா கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார் என்பது நினைவுக் கூரத்தக்கது.

இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ நடத்தும் ‘List A’ உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே டிராபி, பிப்ரவரி 20 தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்று ஜெய்ப்பூரில் தொடங்கிய போட்டியில் ‘குரூப் டி’-யில் இடம்பெற்றுள்ள பாண்டிச்சேரி-மும்பை அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற பாண்டிச்சேரி அணி முதல் பந்து வீச முடிவு செய்தது.

அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி, கேப்டன் பிரித்வி ஷாவின் அதிரடி இரட்டை சதத்தால் 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 457 ஓட்டங்கள் குவித்தது.

ஜெய்ஸவால் (10), ஆதித்யா தாரே (56), சூர்யகுமார் யாதவ் (133), துபே (16) ஓட்டங்களில் அவுட்டாகினர்.

கேப்டன் பிரித்வி ஷா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 31 பவுண்டரி, 5 சிக்ஸர் என 227 ஓட்டங்கள் குவித்தார்.

50 ஓவரில் 458 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாண்டிச்சேரி அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

List A-வில் இரட்டை சதம் அடித்த 7வது இந்திய வீரர் என வரலாறு படைத்தார் பிரித்வி ஷா.

இதற்கு முன் ரோகித் சர்மா, சச்சின், தவான், ஜெய்ஸ்வால், கர்ன்வீர் கௌசல், சாம்சன் ஆகியோர் இரட்டை சதம் அடித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி List A-வில் கேப்டனாக அதிகபட்ச ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் Graeme Pollock (222*), சேவாக் (219), ரோகித் (208*) ஆகியோரை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார் பிரித்வி ஷா.

விஜய் ஹசாரே டிராபி வரலாற்றில் அதிகபட்ச ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் பிரித்வி ஷா, இதற்கு முன் இந்த பட்டியலில் சாம்சன் (212) முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்