ஐ.பி.எல்லை புறக்கணித்த குசல் பெரேரா: முதல்தர போட்டியில் அபார ஆட்டம்!

Report Print Samaran Samaran in கிரிக்கெட்
ஐ.பி.எல்லை புறக்கணித்த குசல் பெரேரா: முதல்தர போட்டியில் அபார ஆட்டம்!
234Shares
234Shares
ibctamil.com

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடத்தப்படும் மாகாண அணிகளுக்கு இடையிலான ‘சுப்பர்-4’ முதல்தர கிரிக்கெட் தொடரின் கடைசி வார இரண்டு போட்டிகளின் இரண்டாவது நாள் ஆட்டம் நடைபெற்றது.

கொழும்பு எதிர் தம்புள்ளை

குசல் பெரேரா மற்றும் மனோஜ் சரத்சந்திரவின் துடுப்பாட்டத்தின் மூலம் கொழும்பு அணிக்கு எதிராக தம்புள்ளை அணி வலுவான நிலையில் உள்ளது.

இதில் ஐ.பி.எல். வாய்ப்பை கைவிட்டு இலங்கை முதல்தர போட்டியில் களமிறங்கியிருக்கும் குசல் பெரேரா நீண்ட போட்டிகளில் ஆடும் தனது திறமையை நிரூபித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரங்கிரி தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் நடைபெற்றுவரும் போட்டியில் தினேஷ் சந்திமால் தலைமையிலான கொழும்பு அணி முதல் இன்னிங்ஸில் 210 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இதன்போது வேகப்பந்து வீச்சாளர் லஹிரு மதுஷான் தம்புள்ளை அணிக்காக 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆட்டத்தின் இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த தம்புள்ளை அணிக்கு குசல் பெரேரா கைகொடுத்தார்.

13 ஓட்டங்களுடன் இரண்டாவது நாள் ஆட்டத்தை ஆரம்பித்த அவர் தனது பாணியில் வேகமாக ஓட்டங்களை குவித்தார்.

லக்ஷான் சதகன் வீசிய நொபோல் பந்தொன்றுக்கு சிக்ஸர் விளாசிய குசல் பெரேரா தொடர்ச்சியாக பௌண்டரிகளை பெற்று ஓட்டங்களை அதிகரித்தார்.

91 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 11 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 85 ஓட்டங்களை பெற்றநிலையில் சதகனின் பந்துக்கு பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

குசல் பெரேரா 2017 பெப்ரவரிக்கு பின்னரே முதல்தர போட்டிகளில் களமிறங்கியுள்ளார்.

எனினும் தனது திறமையை வெளிக்காட்டி இருக்கும் அவர் இலங்கை டெஸ்ட் அணிக்கு அழைக்க தனது தகுதியை நிரூபித்துள்ளார்.

இந்நிலையில் மத்திய வரிசையில் வந்த தம்புள்ளை விக்கெட் காப்பாளர் மனோஜ் சரத்சந்திர முதல்தர போட்டிகளில் தனது 6ஆவது சதத்தை பெற்றார்.

181 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 11 பௌண்டரிகளுடன் 103 ஓட்டங்களை பெற்றார்.

இதன்மூலம் தம்புள்ளை அணி தனது முதல் இன்னிங்ஸுக்காக 84.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 359 ஓட்டங்களை பெற்றது.

இதன்போது கொழும்பு அணிக்காக இடதுகை வேகப்பந்து வீச்சாளர் டிலேஷ் குணரத்ன 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

முதல் இன்னிங்ஸில் 149 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில் இரண்டாவது நாளின் கடைசி நேரத்தில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த கொழும்பு அணி ஆட்ட நேர முடிவின்போது விக்கெட் இழப்பின்றி 37 ஓட்டங்களை பெற்றுள்ளது.

கௌஷால் சில்வா 9 ஓட்டங்களுடனும் செஹான் ஜயசூரிய 24 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்