மாங்கல்யத்தின் மகத்துவம் தெரியுமா?

Report Print Aravinth in கலாச்சாரம்

தலைநிமிர்ந்து நடந்து வரும் ஆடவர், ஒரு பெண்ணைப் பார்க்கும்பொழுது, கழுத்தில் தாலியைப் பார்க்கும் பொழுது இவள் மற்றவருக்கு உரியவள் என ஒதுங்கிப் போய்விடுவார்.

'தாலம் பனை' என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள்.

தாலியின் மகிமை

மாங்கல்யச் சரடானது ஒன்பது இழைகளைக் கொண்டது. ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களைக் குறிக்கிறது.

  1. தெய்வீகக் குணம்,
  2. தூய்மைக் குணம்,
  3. மேன்மை,
  4. தொண்டு,
  5. தன்னடக்கம்,
  6. ஆற்றல்,
  7. விவேகம்,
  8. உண்மை,
  9. உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல்.

இத்தனைக் குணங்களும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்பது இழைகள் கொண்ட திருமாங்கல்யச்சரடு அணியப்பெறுகின்றது

மேலும், திருமணத்தில் திருமாங்கல்யம் அணிவிக்கும் போது மாங்கல்ய தந்துனானேன என்று மந்திரம் சொல்லுவார்கள்.

தந்து என்றால் கயிறு. மஞ்சள் கயிறு தான் தந்து என குறிப்பிடப்படுகிறது. மஞ்சள் சரடில் தாலி இருந்தால் தான் மங்களம். வறுமையில் வாடும் பெண்கள் கூட தங்கத்தாலியை அடகு வைத்து விட்டு, மஞ்சள் கயிறில் மஞ்சள் கிழங்கை கட்டி தாலியாக அணிந்து கொள்வார்கள். ஆக தாலி என்பது மஞ்சள் சரடில் தான் இணைந்து இருக்க வேண்டும்.

கணவன் வாழும்வரை மனைவி மார்பில் எப்பொழுதும் இத்தாலி தவழ வேண்டும். அவனை நெஞ்சோடு தான் தாங்கி வாழும் தன்மையை காலம் முழுவதும் அப்பெண் எடுத்துக்காட்ட வேண்டும்.

மார்பிலே உயிரோட்டம் உள்ள இதயத்தில் இத் தாலி தட்டுப்பட்டுக் கொண்டு இருக்க, அது சீன மருத்துவ முறையான அக்யூபக்சர் முறைபோல் செயல்படுகின்றதாம். எனவே, தாலி என்பது பெண்ணுக்கு வேலி என்பது மாத்திரம் அன்றி பெண்ணுக்கு வலிமை என்றும் சொல்லப்படுகிறது.

ஆனால் இந்தக் காலத்தில் மஞ்சள் கயிறு அணிவதால் அலர்ஜி ஏற்படுகிறது என்று கூட சில பெண்கள் அழகு சாதனப் பொருட்களை உபயோகிப்பது இதென்ன கலாச்சார சீரழிவு என்ற வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

தரமான மஞ்சள் சரடில் தாலியை அணிந்தால் அலர்ஜி எல்லாம் வராது. இன்றும் கூட மிகப்பெரும் பணக்காரர்கள் கூட கழுத்தில் மஞ்சள் சரடில் தான் தாலியை அணிகிறார்கள்.

கழுத்தில் எத்தனை வகையான நகைகள் அணிந்தாலும், மஞ்சள் சரடினால் ஆன தாலியை அணிந்தால் அதன் மகத்துவம் தனி தான். இதைத்தான் இறைவனும் விரும்புவான். கணவருக்கும் ஆயுள் நீடிக்கும் என்கின்றனர் மகான்கள்.

மேலும் கலாச்சாரம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments