தீவிரமாக பரவும் பறவைக் காய்ச்சல்! எப்படி தடுக்கலாம்?

Report Print Kavitha in நோய்
167Shares

பறவைக்காய்ச்சல் பல வகைகள் இருந்தாலும் மனிதர்களை பாதிக்கும் பொதுவான பறவைக் காய்ச்சல் H5 N1 ஆகும். இது 1997 ஆம் ஆண்டு ஹாங்காங்கில் கண்டறியப்பட்டது.

பறவைக் காய்ச்சல், எச் 5 என் 1 அல்லது ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா என்றும் அழைக்கப்படுகிறது

இந்த பறவைக் காய்ச்சல் பறவைகளில் காணப்படும் ஒரு வைரஸ் தொற்று. இருப்பினும் இது மனிதர்களுக்கு அரிதாக பரவ கூடிய ஒரு தொற்றும் ஆகும்.

இது கோழி, வான்கோழி அல்லது காட்டு வாத்துகள் ஆகியவை பாதிக்கப்பட்ட நேரடி அல்லது இறந்த கோழி மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது என்று சொல்லப்படுகின்றது.

இது மனிதர்களுக்கு பரவக்கூடிய தீவிர தொற்று என்பதால் எதிலும் எச்சரிக்கையாக செயற்படுவது மிகவும் அவசியமாகும். இதைத் தடுக்க பல வழிகள் உள்ளன.

தற்போது இதன் அறிகுறிகள், இதிலிருந்து விடுபட என்னென்ன செய்யலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

அறிகுறி என்ன?

 • காய்ச்சல் 38டிகிரி செல்சியஸ் இருக்கும்.
 • தொடர் இருமல், வயிற்றுப்போக்கு இருக்கும்.
 • சுவாசிப்பதில் சிரமம் இருக்கலாம்.
 • தலைவலி.
 • தசைவலிகள்.
 • உடல் நலக்குறைவு.
 • சோர்வு.
 • மூக்கில் சளி ஒழுகுவது.
 • தொண்டையில் வலி.
 • தொண்டைப்புண்.
 • குளிர் மற்றும் வியர்வை.
 • அரிதாக குமட்டல் மற்றும் வாந்தி.
 • ஒரு கண்ணில் மட்டும் தொற்று உண்டாகவும் வாய்ப்பு

எப்படி பரவுகின்றது ?

 • இந்த வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட பறவையின் மலம், எச்சில், வாய் சுரப்பு, அதன் கண்களில் சுரப்பது போன்றவற்றிலிருந்து வெளிப்படுகிறது.

 • பறவைகள் மற்றும் பறவை முட்டைகள் விற்கும் திறந்த வெளியிடங்கள், திடக்கழிவுகள் காற்றில் கலக்கிறது. அதை சுவாசிக்கும் மனிதர்களுக்கு இந்த தொற்று பரவுகிறது.

 • கோழிப்பண்ணைகள் இந்த வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட பறவைகளை தொடுதல் பறவையின் எச்சம் விழுந்த நீரில் குளிப்பது, அந்த நீரை தொடுவதன் மூலமும் இந்த தொற்று உண்டாகலாம்.

 • இந்த தொற்று பாதித்துள்ள கோழியின் இறைச்சியை சாப்பிடுவதன் மூலமும், முட்டையை அரை வேக்காடாக்கி சாப்பிடுவதும் கூட தொற்றை பரப்பும் அபாயம் கொண்டது.

​பறவைக்காய்ச்சல் வைரஸ் வாழும் காலம்

பறவைக்காய்ச்சலை உண்டாக்கும் H5 N1 வைரஸானது நீண்ட காலம் உயிர்ப்போடு இருக்கும். இந்நோய் பாதிக்கப்பட்ட பறவைகளின் மலம் மற்றும் எச்சிலில் இந்த வைரஸ் 10 நாட்கள் வரை வெளிவரும். அது விழும் இடத்தை தொடுவதன் மூலம் தொற்று எளிதாக பரவுகிறது.

யாருக்கெல்லாம் பரவ வாய்ப்புண்டு?

கோழி வளர்ப்பவர்கள், பண்ணை வைத்திருப்பவர்கள், அந்த இடத்துக்கு வரக்கூடிய இறைச்சி வியாபாரிகள், இறைச்சியை அல்லதுமுட்டையை சரியாக வேக வைக்காமல் சாப்பிடுபவர்கள், அவர்களுக்கு மருத்துவம் செய்பவர்கள், வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் இருப்பவர்கள் என சங்கிலித்தொடர் போல் இதன் பாதிப்பு தொடரக்கூடும்.

​பறவைக்காய்ச்சல் கண்டறியும் முறை

 • பொதுவாக ஆய்வக பரிசோதனை மூலம் கண்டறியப்படுகிறது. இது நான்கு மணி நேரத்தில் ஆரம்ப முடிவுகளை வழங்குகிறது.

 • அறிகுறிகளை உணர்ந்து பரிசோதனைக்கு செல்லும் போது முழுமையான இரத்த எண்ணிக்கை பரிசோதனை உடலில் தொற்று இருப்பதை உறுதி செய்யும்.

 • மூக்கு மற்றும் தொண்டையில் இருந்து எடுக்கப்படும் திரவ மாதிரிகள் வைரஸை கண்டறிய உதவுகிறது.

 • நுரையீரலின் ஆரோக்கியத்தை பரிசோதிக்க மார்பக எக்ஸ்ரே செய்யப்படுகிறது.

சிகிச்சை முறைகள்

 • நோய் கண்டறிந்த 48 மணி நேரத்துக்குள் மருந்துகள் எடுக்க தொடங்க வேண்டும்.

 • பறவைக்காய்ச்சல் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் அவர்களது குடும்பத்தினர்கள், அவர்களோடு நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்கும் வைரஸ் தடுப்பு மருந்துகளை பரிந்துரைப்பார்கள்.

 • மனிதர்களில் இந்த தாக்கம் உண்டாக்கும் போது பொதுவான நச்சுயிர் எதிர்ப்பு மருந்துகளுக்கு எதிர்ப்பை உருவாக்கும் என்பதால் மாற்று மருந்துகள் பரிந்துரைக்கப்படும்.

 • தடுப்பு நடவடிக்கையாக அவர்களுக்கும் பரிசோதனை செய்வது பாதுகாப்பானது. சில நேரங்களில் நோயாளியிடமிருந்து நோய்த்தொற்று பரவுவதற்கான வாய்ப்பை தடுக்க அவர்கள் தனிமைப்படுத்துவார்கள்.

இது தீவிரமானல் என்ன நடக்கும்?

தீவிரமாகும் போது இறப்பை ஏற்படுத்தக்கூடும். நிமோனியா, உறுப்பு செயலிழப்பு, கடுமையான சுவாசக்கோளாறுகள் போன்றவை உண்டாகும்.

எப்படி தடுக்கலாம்?

 • கோழி பண்ணையாளர்கள் சுகாதாரத்தை கடைப்பிடிப்பதன் மூலம் தொற்று நேராமல் தடுக்கலாம்.

 • அவ்வபோது கைகளை சோப்பு போட்டு கழுவுவது அவசியம்.

 • கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை நன்றாக சுத்தம் செய்து நன்றாக வேகவைத்து சாப்பிடுவது நல்லது.

தடுப்பூசி உண்டா?

பறவைக்காய்ச்சலுக்கு தடுப்பூசிக்கு FDA பரிந்துரைத்துள்ளது.

மக்கள் மத்தியில் H5 N1 பரவத்தொடங்கினால் தடுப்பூசி பயன்படுத்த வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்