சுவிஸ் நாட்டிலுள்ள சிவஞான சித்தர் பீடத்தினால் கிளிநொச்சி விவேகானந்தநகர் கிராமத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கம் கருதி அம்மாணவர்களுக்குப் பரிசில் வழங்கிக் கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
சுவிஸ் சிவஞான சித்தர் பீடம், கிளிநொச்சி விவேகானந்த நகர் கிராமத்திலுள்ள 2012ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டுவரை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 128 மாணவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் ஒழுங்கமைப்பில் நேற்று முன்தினம் தினம்(07) இடம்பெற்றுள்ளது.
விவேகானந்தநகர் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்ட சி.சிறீதரன் கருத்து வெளியிட்டுள்ளார். வெற்றியீட்டியவர்களுக்கே பரிசில்கள் வழங்கப்படுகின்றன.
இதில் கலந்துகொண்ட மாணவர்கள் அனைவரும் கல்வியில் மென்மேலும் பல சாதனைகளைப் புரிய தமது ஊக்கத்தையும் விடாமுயற்சியையும் கைவிடாது உழைத்து உயர் நிலையடைய வேண்டும்.
மாணவர்களை ஊக்குவிப்பதற்காக சுவிஸ் நாட்டின் சிவஞான சித்தர் பீடம் இப்பரிசில்களை வழங்கிக் கௌரவித்தமைக்காக அவர்களுக்கும் இவ்வேளையில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் தெரிவித்துள்ளார்.
நடராசா சிவயோகநாதன், சிவஞானசித்தர்பீடம், அறிவு ஆய்வாளர் வளாகம் சுவிசர்லாந்தின் தலைவராகச் செயற்பட்டு வருகின்றார்.
புலம்பெயர் தேசங்களில் தமிழர் தமது மொழி பண்பாடு சமய ஆசாரமுறமைகள், ஆன்மிகம் போன்றவற்றில் வழுவாதிருக்கவேண்டும் என்ற நோக்கோடு புலம்பெயர் தமிழ் மாணவர்களின் கல்விக்காகவும் ,
ஆன்மீகத்துக்காகவும், பல மாநிலங்களில் அறிவு ஆய்வாளர் வளத்தினை நிறுவி அதனூடே 300 மாணவர்களிற்கு மேல் கல்வி கற்கக்கூடியதாக எல்லா மொழிகளிலும் பயிற்றப்பட்ட ஆசிரியர்களாலும், பல்கலைக்கழக மாணவர்களாலும் வகுப்புக்களை நடத்துகின்றார்.
இதனால் இங்குள்ள மாணவர்களும் கல்வியிலும், கலாச்சாரம், ஆன்மீகம் போன்றவற்றில் முன்னணி வகிக்கின்றார்கள்.
இதேபோல் எமது நாட்டிலும் மாணவர்கள் கல்வியில் முன்னுக்கு வரவேண்டும் என்ற நோக்கம் கருதி இப்படியான கல்வி ஊக்குவிப்பு உதவிகளைச் செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.