தமிழன் தானே? நிகழ்ச்சியின் பெயர் தான் அப்படி...ஆனால்! நிர்மலா பெரியசாமி பரபரப்பு கருத்து

Report Print Fathima Fathima in பொழுதுபோக்கு

நிர்மலா பெரியசாமியை பற்றி தெரியாதவர்கள் இருக்கமுடியாது! இவர் தான் முதலில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இதுகுறித்து விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில்,

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி வாய்ப்புப் பற்றி..?

ஏ.எல்.எஸ் புரொடக்‌ஷன் ஜெயந்தி கண்ணப்பன் அவர்கள், ஜீ தமிழ் சேனலில் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சி உருவாக்கத்தின்போது, தொகுப்பாளராக என் பெயரைப் பரிந்துரைத்திருக்கிறார்.

அப்படித்தான் அந்த வாய்ப்பு வந்தது. முதல் நிகழ்ச்சியே, டி.ஆர்.பி ரேட்டிங்கில் நல்ல இடம் பெற்றது. தொடர்ந்து மக்களிடம் பெரிய அளவில் ரீச் ஆனது. எதையும் சிறப்பாக செய்வது என்னுடைய வழக்கம்.

அதே போல சிறப்பான பங்களிப்பைக் கொடுக்க வேண்டும் என்று, இந்த நிகழ்ச்சிக்காக ஒவ்வொரு விஷயத்திலும் மிகவும் அக்கறை எடுத்துக்கொண்டேன்.

சொல்லப்போனால், அந்த நிகழ்ச்சி மக்களிடையே இன்றும் ஆர்வம் குறையாமல் சென்றுகொண்டிருப்பதில், நான் அமைத்துக்கொடுத்த அடிப்படைக்கு மிகப்பெரிய பங்கு உண்டு என்பதை பெருமையுடன் சொல்லிக்கொள்வேன்.

ஆனால், நான் அந்த அளவுக்கு பார்த்துப் பார்த்துச் செதுக்கிய நிகழ்ச்சியை, தொடர்ந்து நடத்துபவர்கள் பாழாக்கிவிட்டார்கள்.

ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?

லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை நடத்த வந்த பிறகு, அதில் கலந்துகொண்ட குடும்பங்களுடன் சம்பந்தப்பட்ட எத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கிறார்கள் தெரியுமா?

சமீபத்தில் கூட அடுத்தடுத்து மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதே மாதிரி கேரளாவில் செய்ய துணிவிருக்கிறதா? மலையாளிகள் விட்டுவிடுவார்களா..? தமிழன் தானே..? எத்தனை வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன தெரியுமா?

நிகழ்ச்சியின் பெயர் என்னவோ, 'சொல்வதெல்லாம் உண்மை', 'நிஜங்கள்'. ஆனால், அங்கெல்லாம் உண்மை பேசப்படுகிறதா..? அந்த நிகழ்ச்சியை வழங்குபவர்கள் நிஜத்துடன் நடந்துகொள்கிறார்களா? நிகழ்ச்சியில் கலந்துகொள்பவரை மிரட்டுவதற்கும், சட்டையைப் பிடித்து உலுக்குவதற்கும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?

நான் 750க்கும் மேற்பட்ட எபிஸோடுகளை நடத்தியிருக்கிறேன். பிரச்னை என்று வருபவர்களிடம் ஒரு நாள் முழுக்கக்கூட உட்கார்ந்து பேசி, அவர்களின் சூழலை நன்கு புரிந்துகொண்டு, அவர்கள் வந்த வேகத்தில் இருந்த கோபத்தை எல்லாம் சமாதானப்படுத்திய பிறகுதான், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்த நிகழ்ச்சியில் கலந்தாலோசிப்போம்.

இந்த ஷூட் முடிந்துவிட்டால், மேக்கப் மாற்றிக்கொண்டு அடுத்த ஷூட்க்கு செல்லும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் அல்ல நான். அந்தச் சமயத்தில், இந்த நிகழ்ச்சிக்காக மட்டுமே என்று என் நேரம் முழுவதையும் செலவிட்டு, அக்கறை, ஒழுங்கு, நேர்த்தியுடன் அதைத் தொகுத்து வழங்கினேன்.

அதனால்தான், சென்சிட்டிவான களம் என்றாலும்கூட, அதில் விபரீத பிரச்னைகள் வந்ததில்லை. இன்றோ, தற்கொலை செய்திகளைக் கேட்கவே மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இதை ஏன் சமூக வலைதளங்களில் எதிர்க்கவில்லை? மீடியாக்கள் பேசவில்லை?

நிகழ்ச்சியை பிரபலமாக்குவதற்காக எதையும் செய்யலாமா?. தமிழ்ப் பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ளவார்கள். இவர்கள் யாரும் புதிதாக வந்து பெண் போராளிகள் என்று அவதாரம் எடுக்க வேண்டியதில்லை.

டி.ஆர்.பி ரேட்டிங்தான் அனைத்துக்கும் காரணமா?

''டி.ஆர்.பி ரேட்டிங் என்பது ஆரோக்கியமான போட்டிதான். ஆனால், சமூக அக்கறையும் அதில் வேண்டும். கூடவே, நிகழ்ச்சி நடத்துபவர்கள் தாங்கள் பிரபலமாக வேண்டும் என்பதற்காக, அளவுக்கு மீறிச் செல்லக்கூடாது.

சினிமாவில் நடிக்கும்போது மக்களுக்கு, அது உண்மையல்ல நடிப்புதான் என்று நன்றாகவே தெரியும். ஆனால், இந்த நிகழ்ச்சி உண்மைச் சம்பவங்களைச் சொல்வது. இதில் ஏன் போலியாக நடிக்க வேண்டும்? உண்மையை மட்டும் பேசுங்கள் என்றுதான் சொல்கிறேன்.

புகழ் என்பது என்ன தெரியுமா..? எவன் ஒருவன் தன்னை மறந்து மற்றவனுக்காக உழைக்கிறானோ அதுதான் உண்மையான புகழ். உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பதவியை வைத்தோ, விலைக்கு வாங்கும் பெயரை வைத்தோ புகழ் என்பது அமையாது. நீங்கள் பார்க்கும் வேலையை நேர்மையுடன் சிறப்பாகச் செய்து, உங்கள் மனசாட்சியிடமிருந்து பாராட்டுப் பெறுவீர்கள் பாருங்கள்... அதுதான் உண்மையான புகழ்!'' என முடித்தார் நிர்மலா பெரியசாமி.

- Vikatan

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments