பிரபல மலையாள தயாரிப்பாளர் பி.கே.ஆர்.பிள்ளையின் மகனும், நடிகருமான சித்து கோவா கடற்கரையில் இறந்து கிடந்தது மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துல்கர் சல்மானின் ‘செகண்ட் ஷோ’ எனும் படம் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானவர் சித்து. 27 வயதான இவர், பிரபல தயாரிப்பாளர் பி.கே.ஆர்.பிள்ளையின் மகன் ஆவார்.
திருச்சூரைச் சேர்ந்த சித்து, கடந்த 12ஆம் திகதி கோவா சென்றதாக கூறப்பட்டது. இந்நிலையில், அங்குள்ள கடற்கரையில் சித்து மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
அவரின் இறப்பு, மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சித்துவுடன் செகண்ட் ஷோ படத்தில் இணைந்து நடித்த சன்னி வெயின் என்பவர், ‘ஒன்றாகத் தானே துவங்கினோம். ஒரு வார்த்தை கூட சொல்லாமல் போய்விட்டாயே’ என்று தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில், ‘என்ன அவசரம் சித்து, அதற்குள் சென்றுவிட்டீர்கள். உங்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம்’ என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சித்து 12ஆம் திகதி கோவா சென்றார் என்று வெளியாகிய செய்தி தவறு என்றும், 9ஆம் திகதியே தான் சித்துவை அஞ்சுனா எனும் இடத்தில் பார்த்ததாகவும் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
I was in Goa till 11th and saw him on anjuna on 9th eve. It's fake news he went to Goa on 12th. RIP. #SidhuRPillai
— Kiran Sagar (@kirrus22) 17 January 2018