சர்ச்சை நடிகரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க மறுத்தது ஏன்? அமீர்கான் விளக்கம்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க மறுத்தது ஏன் என்று நடிகர் அமீர்கான் விளக்கமளித்துள்ளார்.

ஹிந்தி திரையுலகில் பல சர்ச்சைகளுக்கு ஆளான நடிகர் சஞ்சய் தத். கடந்த 1993ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு, துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்து உதவி புரிந்ததாக சஞ்சய் தத்துக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் சஞ்சய் தத்தின் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், நன்நடத்தை காரணமாக தண்டனை காலம் முடிவதற்கு 8 மாதங்களுக்கு முன்பே, மகாராஷ்டிர அரசு அவரை விடுவித்தது.

இந்நிலையில் சஞ்சய் தத்தின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகியுள்ளது. ‘சஞ்சு’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகர் ரன்பீர் கபூர், சஞ்சய் தத்தின் வேடத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் நடிக்க முதலில் தனக்கு வாய்ப்பு வந்தாகவும், தான் அதில் ஏன் நடிக்க மறுத்தேன் என்றும் நடிகர் அமீர்கான் விளக்கமளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘ராஜ்குமார் ஹிரானி, திரைக்கதையுடன் வந்து என்னை சந்தித்தார். எனக்கு மிகவும் பிடித்துப்போனது. சஞ்சய் தத்தின் தந்தை சுனில் தத் வேடத்தில் என்னை நடிக்க வேண்டினார். அதுவும் அருமையான பாத்திரம்.

படமே அப்பா-மகனின் உறவைக் கொண்டுதான் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் சஞ்சய் தத்தின் கதாபாத்திரம் அட்டகாசமாக இருந்தது. ஒரு நடிகராக, சஞ்சய் தத்தின் கதாபாத்திரம் அருமையாக உள்ளது. என் மனதைக் கொள்ளை கொண்டுவிட்டது.

எனவே, இந்தப் படத்தில் சஞ்சய் தத்தின் கதாபாத்திரத்தைத் தவிர, என்னால் வேறு கதாபாத்திரங்களில் நடிக்க முடியாது என்று ஹிரானியிடம் கூறினேன். சஞ்சய் தத் வேடத்தில் ரன்பீர் கபூர் நடிப்பதால் என்னால் அதிலும் நடிக்க முடியாது.

எனவே, இந்தப் படத்தில் என்னை நடிக்க அழைக்க வேண்டாம் என்று கூறினேன். சஞ்சு படத்தைக் காண ஆவலாக உள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.

இந்த திரைப்படம் ஜூன் 29 ஆம் திகதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்